தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!

இந்து தமிழ் திசை நாளிதழின், ‘பெண் இன்று’ பகுதியில் வெளியான எனது கட்டுரை. ஜூன் 1, 2021.

கருவுற்றிருக்கும் ஒரு பெண் தான் குழந்தை பெற்றெடுக்கப்போவது குறித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். கரு சுமப்பவள் என்னவெல்லாம் வாசிக்க வேண்டும், யாருடைய இசையை ரசிக்க வேண்டும், என்ன படம் பார்க்கலாம், எதையெல்லாம் சாப்பிடலாம் போன்ற கேள்விகளுக்கு முகநூலில் கணவர்கள் விடை தேடுகிறார்கள். தாயும் சேயும் நலமுடன் இருக்க தன் மகளை அல்லது மருமகளை உடல் பரிசோதனைக்கு தவறாது பெண்கள் அழைத்துச் செல்கிறார்கள். உடல் நலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலனுக்கும் கொடுங்கள் என சொல்லுகிறது உலக, தாய்க்குரிய மனநல நாள்.

விழிப்புணர்வு

2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல நாடுகளிலிருந்தும் பல்துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள். செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள் கலந்துரையாடினார்கள். தாய்க்குரிய மனநலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எல்லா நாடுகளும் கொள்கை முடிவெடுத்து அதைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். அதன்படி, 2016ஆம் ஆண்டிலிருந்து மே மாதத்தின் முதல் புதன்கிழமை, தாய்க்குரிய மனநல நாளாகவும்,மே மாதம் முழுவதும் தாய்க்குரிய மனநல மாதமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்க்குரிய மனநலம்

மனநலம் என்பது, ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களை சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பு செய்வது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் அந்நபருடைய உளவியல், உடலியல் மற்றும் வளச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

பொதுவாக, தாய்க்குரிய மனநலன் என்பதை, அவள் கருவுற்றிருக்கும் காலம் தொடங்கி குழந்தை பிறந்த பிறகான 12 மாதங்கள் வரை கணக்கிடுகிறார்கள். கருவுற்ற பிறகு உடலில் நிகழும் மாற்றங்கள், எதிர்பார்ப்புகள், புதிய சவால்கள், கூடுதலான பொறுப்புகள் போன்றவற்றால் பதட்டமும் (Anxiety) மனச்சோர்வும் (Depression) இயல்பாகவே பெண்களுக்கு ஏற்படுகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்திய பெண்களின் நிலை

கருவுற்றிருந்த பெண்களிடமும், குழந்தை பெற்று 12 மாதங்கள் தாண்டாத பெண்களிடமும் இதுவரை குறைவான ஆய்வுகளே இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தாய்மாரின் மனநலனைப் பாதிக்கும் காரணிகளாக, பொருளாதார சிக்கல், பெற்றோர் ஏற்பாடு செய்யாத திருமணங்கள், திருமண முரண்பாடுகள், ஆண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம்,  ஏற்கெனவே கரு கலைந்த துயர அனுபவம், குழந்தை இறந்து பிறந்தது, சிறப்புக் குழந்தையாகப் பிறந்தது, குடும்ப வன்முறை, கணவர் மதுவுக்கு அடிமையாக இருப்பது போன்றவற்றை இதுவரையிலான இந்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கருவுற்றிருக்கும் பெண்களிடம், தென்னிந்திய அளவில் 2019இல் ஆய்வு செய்த மருத்துவர் சுவர்ன ஜோதி மற்றும் பலர், கரு சுமக்கும் பெண்களிடம் மனச்சோர்வு அல்லது அதீத பதட்டம் (Generalized Anxiety Disorder) அல்லது மனச்சோர்வும் அதீத பதட்டமும் சேர்ந்தே இருப்பதாக வெளியிட்டுள்ளார்கள்.

தாய்க்குரிய அவதிகள்

கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனநல சிக்கல் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இருக்கும் ஏதாவது நோய், குழந்தை பெற்றெடுப்பது குறித்து சிறுவயது முதல் அவள் கேட்ட கதைகளின் தாக்கம், ஏற்கெனவே குழந்தை பெற்ற போது ஏற்பட்ட பயம், திட்டமிடப்படாத கர்ப்பம், உடல் மற்றும் உணர்வு ரீதியிலான குடும்ப வன்முறை, கிராமத்தில் இருந்து நகரத்தில் குடியேறிய தாயின் தனிமை, கணவர் கைவிட்டுவிட்டதால் தனி ஆளாக குழந்தையை வளர்ப்பது, குழந்தைக்கு தம்மால் ஏதும் பிழை நேர்ந்துவிடுமோ என்கிற பயம் போன்ற எண்ணற்ற காரணங்கள் தாயின் மன சமநிலையைக் குலைக்கின்றன. இவைகளைக் கவனிக்காமலும், சிகிச்சை அளிக்காமலுமே நாம் பெரும்பாலும் கடந்து போகிறோம்.

மனநல சிக்கல்கள் 

வாழ்க்கையில் மற்ற நேரங்களில் ஏற்படும் மனச்சோர்வுக்கான அதே அறிகுறிகளைத்தான் கருவுற்றிருக்கும் பெண்களிலும், குழந்தை பெற்றெடுத்த அன்னையரிலும் பார்க்கிறோம். உதாரணமாக, தூக்க குறைபாடு, பசியில் மாற்றம், கவனம் செலுத்த இயலாமை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான மனநிலை, எரிச்சல். ஆனால் கூடுதலாக, மனச்சோர்வுடைய இவர்கள் குழந்தையை சரிவர பார்க்க இயலவில்லையே எனும் குற்ற உணர்வுக்கும் ஆளாகிறார்கள்.

தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதை வெளிப்படுத்த அன்னையர்கள் தயங்குவதாகவும், தங்களை ‘நோயாளி’ அல்லது, ‘மோசமான தாய்’ என முத்திரை குத்திவிடுவார்கள் என அச்சப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் ஏழ்மையான அல்லது நடுத்தரமான நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயேகூட 10 -15 விழுக்காடு பெண்கள் மனநல சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். 

குழந்தைகளுக்கு பாதிப்பு

தாயின் மனநல சிக்கலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு நிறைவாக வளராதது, குறைவான எடையுடன் பிறப்பது, குறை பிரசவம், நோய் மற்றும் தொற்று எளிதில் குழந்தைகளைத் தாக்குவது என பல வகைகளில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகள் வளர்ந்த பிறகு, சமூகத்தில் பிறருடன் இயைந்து பழகுவதிலும் தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

ஆதரவு குழுக்கள்

மனநலச் சிக்கலில் உள்ள கருவுற்ற பெண்களுக்கு இந்தியாவில் போதுமான ‘சமூக ஆதரவு’ கிடைப்பதில்லை என மருத்துவர் சுவர்ன ஜோதி தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார். அதேவேளையில், தாயின் மனநலனை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய பங்கு ஆதரவு குழுக்களுக்கு (Support Groups) இருப்பதாக உலக அளவில் எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மனச்சோர்வு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவரும் உளவியலாளர் ஆரோன் பெக், ‘ஆதரவு குழுக்கள்’ கூடும்போது, ‘நான் தனியாக இல்லை’ என்னும் நம்பிக்கையை ஒரு தாய் பெறுகிறார். கணவர்களும் மனைவியர்களும் கூடுகின்ற ‘ஆதரவு குழுக்கள்’ கூட்டங்களில் கஷ்டங்களைச் சமாளிக்கிகிற நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் அறிவதோடு, சிறப்பாக செயல்படுதவற்கான பாராட்டுக்களையும் அவர்கள் பெறுகிறார்கள். யாரும் நம்மை தவறாக நினைப்பார்களோ என்னும் கலக்கமின்றி, தங்களின் பயத்தையும், தேவைகளையும் பற்றி கலந்துரையாடுகிறார்கள் என்கிறார்.

நாம் சொல்ல வேண்டியது

பதட்டத்தோடும், மனச்சோர்வுடனும் இருக்கும் அன்னையரிடம் நாம் அடிக்கடி சொல்ல வேண்டிய மூன்று நல்வாக்கியங்கள், (1) நீங்கள் தனியாக இல்லை. நண்பர்களும் உறவினர்களும் உங்களோடு இருக்கிறோம். (2) உங்களுக்கு ஏற்படும் பதட்டத்துக்கும் மனச்சோர்வுக்கும் உங்களை நீங்களே குற்றம் சுமத்த வேண்டியதில்லை (3) உங்களுக்கு உதவி செய்வதற்கும் வழிகாட்டுவதற்கும் மருத்துவர்களும், மனநல ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டியது

நாம் வாழ்கின்ற பகுதிகளில் கருவுற்றுள்ள பெண்களும், குழந்தை பெற்று ஓராண்டுக்குள் இருக்கும் அன்னையரும் வாரம் ஒருமுறை கூடி கலகலப்பாக பேசுவதை தனித்தனியாக ஒருங்கிணைக்கலாம். மனநல மருத்துவர், செவிலியர் போன்றோரை வரவழைத்து சந்தேகங்களைத் தீர்க்கவும், ஊக்கப்படுத்தவும் செய்யலாம். தாய்க்குரிய மனநலனுக்கான திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்தை அறிவுறுத்தலாம். நாமும் தாய்க்குரிய மனநலனுக்கான விழிப்புணர்வு தூதுவர்களாகலாம்!

 https://www.hindutamil.in/news/supplements/penn-indru/677307-the-mental-health-of-mothers-should-not-be-forgotten.html

சூ.ம.ஜெயசீலன்

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

19 thoughts on “தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!

  1. தெளிவான புதிய தாய்மார்களுக்கும் அவர்களை சார்ந்தோற்கும் தேவையான சிறந்த தகவல்கள்…
    பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏

    Liked by 1 person

      1. மிகவும் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்
        எல்லா தாய்மார்களுக்கும் ஊக்கமூட்டும் தகவல்

        Like

  2. தாய்மார்களின் பொக்கிஷம் என்று கூறும் அளவிற்கு தாய்மைப்பேறு அடைந்தவர்களும் அவர்களை சார்ந்தோரும் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கருத்துப் பகிர்வு… வாழ்த்துக்கள்… உங்கள் பகிர்வு தொடரட்டும்…

    Liked by 1 person

  3. ராஜ்குமார் செல்லதுரை - ஆண்டாவூரணி says:

    மிக அருமையான பதிவு … இந்தியா என்று கூறும்பொழுது இதையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம் …
    ஆட்சியாளர்களின் தவறான கொள்கைமுடிவுகளும் (பணமதிப்பிழப்பு , எதை உண்ணவேண்டும்) பெண்களின் மனஅழுத்தத்தை அதிகப்படுத்தும் …

    Liked by 1 person

  4. Your way of understanding on women is marvelous . It is relevant information for a women. it is very simple and well explained.practical feelings and emotions are brought out well.
    It is very personal and to give keen attention to read the life of people.
    Thank you. Keep rocking.All the best.

    Liked by 1 person

  5. அருமையாக உள்ளது. மிக்க நன்றி. தாய்மையின் உணர்வுகள் வார்த்தைகளில் உதிரும் மலர்களால்…. மனதில் மணம் பெற்றோம்.

    Liked by 1 person

  6. Fr, உண்மையாகவே ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருக்கிறாள் என்பதை மிகத் தத்ரூபமாக குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள் .
    உங்கள் கட்டுரையை வாசிக்கும் பொழுது நான் கருவுற்றிருந்த அந்தக் காலகட்டங்கள் நினைவுக்கு வந்தது.
    நன்றி Father
    வாழ்த்துக்கள்
    கட்டுரை மிகவும் அருமை.

    Liked by 1 person

  7. இது புதிய தகவலும் தேவையான தகவலும் கூட…இது உண்மையும் கூட இது போல பல சவால்களை பெண்களாகிய நாங்கள் கடந்து வந்துள்ளோம் என்பது உண்மை தான்..தங்கள் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துகள்

    Liked by 1 person

  8. உண்மையாகவே கண்ணீர் வந்துவிட்டது நான் கருவுற்றிருந்த காலத்தை நினைத்து.Fr .தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் 🎊

    Liked by 1 person

  9. Dear Fr. It’s really wonderful and amazing article. God bless your writing and interpretation skills.
    My heartiest wishes to you Fr.

    Liked by 1 person

  10. பெண்களின் உண்மையான வலிகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    Liked by 1 person

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started