இது பேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுன் 28, 2021

சமீபகால நகைச்சுவை – திகில் திரைப்படங்களைப் பார்த்து நாம் வயிறு வலிக்க சிரித்திருக்கிறோம். மன பாரம் குறைந்த மகிழ்வில் நன்கு தூங்கியிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே திகிலுறும்போது ஒருவரால் சிரிக்க முடியுமா? மனம் சமநிலையில் இருக்குமா?

திகிலுறச் செய்யும் நிகழ்வுகள் ஒருவித மனநிலையை நமக்குள் தூண்டுகின்றன. இந்தத் தூண்டுதலால் பாதிக்கப்படாமல் ஒருசில நாட்களிலேயே பலர் சரியாகிவிடுகிறார்கள். ஆனாலும், மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திகிலில் இருந்து வெளியேற முடியாமல் சிலர் துன்புறுகிறார்கள். இவர்களை ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’ (Posttraumatic Stress Disorder- PTSD) உள்ளவர்கள் என உளவியல் வரையறுக்கிறது. திகில் அனுபவத்தை, நேரடி அனுபவத்தால் திகிலுறுவது மற்றும் பிறருக்கு நடப்பதைப் பார்த்து திகிலுறுவது என இரண்டு வகையாக உளவியல் பிரிக்கிறது.

தனக்கும் பிறருக்கும்

இயற்கை அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவில் சிக்கியவர்கள், வாகன விபத்தைச் சந்தித்தவர்கள், சார்ஸ் போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், கடலில் மீன் பிடிக்கும் போது அலையிலும் வலையிலும் சிக்கி மீண்டவர்கள், போர், கலவரம் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் மாட்டியவர்கள், கொலையில் தப்பியவர்கள், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகள் அனைவருமே நேரடியாக திகிலுறுவதன் சாட்சிகள்.

மற்றவர்கள் மிரட்டப்படுவதை, கொலை செய்யப்படுவதை, குடும்ப வன்முறையை, இயற்கைக்கு மாறான மரணத்தை, பாலியல் துன்புறுத்தலைப் பார்ப்பவர்கள், பாலியல் வன்புணர்வு போன்ற வழக்கில் மிக நுட்பமாக சிறுசிறு தகவலையும் விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் அனைவருமே பிறருக்கு நடப்பதைப் பார்த்து திகிலுறுவதன் சான்றுகள்.

பொதுவாக நோய்க்கான அறிகுறிகள் நிகழ்வு நடந்த முதல் மூன்று மாதத்துக்குள் தெரிய ஆரம்பிக்கும். அன்றாட நடவடிக்கைகளைத் தொந்தரவு செய்யும். வேலை செய்கின்ற இடம், அலுவலகம், வீடு, படிக்கும் இடம், நட்பு, உறவு அனைத்திலும் இயல்பாக இருக்க இயலாதவாறு பாதிப்பை ஏற்படுத்தும்.

“நல்லாத்தாங்க இருந்தான், என்ன ஆச்சுன்னே தெரியல. விபத்துக்குப் பிறகு அப்படியே ஆளே மாறிட்டான். யாரிடமும் பேச மாட்டேங்கிறான், வீட்டைவிட்டு வெளியே போகவே மாட்டேங்கிறான்” என புகார் சொல்வார்கள். வருவோர் போவோர் அனைவரும் அறிவுரை கூறுவார்கள்.

1064120002

ஊடுறுவல் அறிகுறிகள் (Intrusion Symptoms)

நடந்த நிகழ்வை சிலர் தானாகவே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பார்கள். அவர்களால் அதிலிருந்து வெளியேறவே முடியாது. தத்ரூபமாக தற்போதுதான் நிகழ்வதுபோல நினைப்பார்கள். திகில் ஏற்படுத்திய நிகழ்வுகளை நினைவூட்டும் கொடுங்கனவுகள் அடிக்கடி வரும். சில நேரங்களில், நிகழ்காலம் குறித்த முன்னுணர்வுகள் முழுதும் மறந்து நாம் எங்கே இருக்கிறோம், அருகில் இருப்பது யார் என்கிற எந்த உணர்வும் இன்றி செயல்படுவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்த நிகழ்வை விளையாட்டாக விளையாடுவார்கள்.

“பொண்ணுக்கு பேய் புடிச்சிருக்கு! பரமக்குடி பக்கம் ஒருத்தர் பேய்க் கோளாறு இருக்கிறவங்ளைப் பார்க்கிறாராம். போனா உடனே சரியாகிடுதாம். ஒருநாள் போய்ட்டு வாங்க” என அறிவுரை சொல்வார்கள். புறணி பேசத் தொடங்குவார்கள்.

திகிலுற்ற சிலர், இரவில் திடீரென்று விழித்தெழுவார்கள், அழுவார்கள், அஞ்சுவார்கள், பிதற்றுவார்கள். கல்லூரி விடுதியில் என் நண்பர் மின்சாரம் தாக்கி பலியானார். மகனின் இறப்பை பெற்றோரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் இரவு நல்ல மழை பெய்தது. அந்த நள்ளிரவில் கையில் குடை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார் தந்தை. வீட்டில் இருந்தவர்கள் பதறி எழுந்து ஓடி அவரைப் பிடித்து நிறுத்தி, ‘எங்கே போகிறீர்கள்?’ என கேட்டபோது, ‘மகன் மழையில நனைஞ்சிக்கிட்டு இருக்கான். அவனுக்கு குடை கொடுக்கப் போகிறேன்’ என்றாராம்.

ஒரு சத்தம், ஒரு சொல், ஒரு காட்சி ஏதோ ஒன்று திகிலை நினைவுபடுத்தும்போது அது  தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்தும், உடலும் எதிர்வினை செய்யும். 2004ஆம் ஆண்டு ஒரு இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற எங்கள் மீது ஒரு லாரி மோதிச் சென்றது. வண்டியை ஓட்டிய என் பெரியப்பா என் கண் முன்னே இறந்தார். எனக்குப் பெரிய அடியொன்றும் இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், பேருந்தின் வலதுபக்க சன்னல் ஓரம் அமர்ந்து பயணித்தேன். ‘விஸ்க்’ என பெருஞ்சத்தம் ஒருநொடியில் என் காதுகளைக் கடந்தது. அரண்டு இடப்பக்கம் விழுந்தேன். பிறகுதான் தெரிந்தது, பேருந்தை ஒரு லாரி கடந்து சென்றிருக்கிறது என்பது. இப்போது சென்ற லாரியின் வேகம், விபத்து நடந்தபோது எங்கள் மீது மோதிவிட்டு விரைந்து சென்ற லாரியின் பேரோசையை நரம்புகளுக்குள் கடத்திவிட்டது.

விலகிச் செல்லுதல்

திகிலடையச் செய்த நிகழ்வைப் பற்றி எதார்த்தமாகக்கூட நினைக்க சிலர்  விரும்ப மாட்டார்கள். அதுகுறித்து மற்றவர்கள் நினைவுபடுத்துவதையோ, அல்லது பேசுவதையோ ஏற்கமாட்டார்கள். எதையாவது சொல்லி பேச்சை மாற்றுவார்கள். நிகழ்வு நடந்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். அதில் தொடர்புடைய மனிதர்களைச் சந்திக்க மறுப்பார்கள். திகிலை நினைவுபடுத்தும் பொருட்கள், செயல்கள், உரையாடல்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

தன்னைப்பற்றியும், மற்றவர்களைக் குறித்தும், உலகத்தைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பயம், திகில் கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும். ‘நான் மோசமானவன்’; ‘இப்படி நடந்ததுக்கு நான்தான் காரணம்’; ‘நான் எப்போதுமே தவறாகத்தான் முடிவெடுப்பேன்’; ‘யாரையுமே நம்ம முடியாது’; ‘உலகத்தில் பாதுகாப்பான இடமே இல்லை’; ‘என்னுடைய நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டுள்ளது’ என நினைப்பர். பயம், திகில் கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும்.

முன்பு எதையெல்லாம் மகிழ்ச்சியாக செய்தார்களோ அவை அனைத்திலும் ஆர்வம் குறையும். மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பர். மகிழ்ச்சி, மனநிறைவு, திருமண உறவு போன்றவற்றில் நேர்மறை உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்த இயலாமல் உணர்ச்சியே இல்லாதவர் போல் இருப்பர்.

இவர்களைப் பார்த்து, “பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசறா!” என ஒருவர் சொல்ல; “ஆமா, இருக்கலாம், பாஸ்டர் ஒருத்தர் முழு இரவு செபம் செய்கிறார். குடும்பத்தோட போய் எல்லாரும் முழு இரவு செபம் செஞ்சா சரியாகிடும்” என அடுத்தவர் குறிப்பிட; “தர்காவுல மந்திரிச்ச கயிறு வாங்கி கட்டினால் போதும்” என மற்றவர் பரிந்துரைக்க; “குளித்லை மந்திரவாதி மந்திரிச்சு கொடுக்கிற தாயத்த கட்டிவிட்டா எல்லாம் சரியாகிடும்” என இன்னொருவர் சொல்ல என்று குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்கிவிடுவார்கள்.

எதிர்வினை

எவ்விதத் தூண்டுதலும் இல்லாமலேயே, அல்லது குறைந்த தூண்டுதலுக்கே திகிலுற்ற சிலர் உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள். எரிச்சலுறுவார்கள், கோபப்படுவார்கள், கத்துவார்கள், சண்டைக்கு நிற்பார்கள், பொருட்களை உடைப்பார்கள். அதிகமாக குடிப்பார்கள், போதைப் பொருள் எடுப்பார்கள், அதிவிரைவாக வாகனம் ஓட்டுவார்கள். எளிதில் பயப்படுவார்கள், எப்போதும் யாராவது உடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தூங்குவதில் சிக்கல், கவனம் செலுத்துவதில் சிக்கல் அனுபவிப்பார்கள். தற்கொலை எண்ணமும் தலைதூக்கும்.

இயல்பு நிலைக்குத் திரும்புதல்

எல்லோருமே நோயாளிகளா என்று கேள்வி கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். என்னென்ன அறிகுறிகள் இருக்கின்றன? எத்தனை அறிகுறிகள் இருக்கின்றன? நோய்க்குறிகளின் தீவிரம் என்ன? எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை வருகிறது? எவ்வளவு நேரம் நீடிக்கிறது? போன்ற பல்வேறு காரணிகளைத் தெரிந்த பிறகே ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’ உண்டா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால், திகிலுற்ற அனைவருக்குமே தற்காலிகமாக சில பிரச்சனைகள் இருக்கும். அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட ஆகலாம். ஆற்றுப்படுத்துதல், தியானம், செபம், நண்பர்களைச் சந்திப்பது, படைப்பாற்றல் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவது என தங்களையே பொதுவாக பலர் சரிசெய்துகொள்வார்கள். அடுத்தடுத்த வேலைகளில் நடந்ததையே மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.

அதேவேளையில், முழுமையாக எல்லாரும் நலமடைந்து விட்டார்கள் என சொல்லவும் இயலாது. இயல்புநிலைக்குத் திரும்பிய வெகுசிலருக்கு, பழைய நிகழ்வை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போதோ, புதிதாக திகில் அனுபவம் ஏற்படும்போதோ, அல்லது அன்றாட வாழ்வின் பதற்றங்களினாலோ மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்தும் இதன் அறிகுறிகள் வெளிப்படலாம்.

குணப்படுத்த முடியும்

‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலை’வைக் குணப்படுத்த ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உளநோய்த் தீர்முறைகள் (Psychotherapy) பல இருக்கின்றன. தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு மாத்திரைகளும் பயன்பாட்டில் உள்ளன. எனவே, உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் செல்வோம். ஆற்றுப்படுத்துனர்களை நாடுவோம். திகிலுற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுப்போம் அவர்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக நடைபோட உதவுவோம். ஒருமுறையாகிலும் திகிலுறாதவர்கள் உலகில் யாருமே இதுவரை இருந்ததில்லை என்பதை நினைவில் ஏந்துவோம்.

சூ.ம.ஜெயசீலன் sumajeyaseelan@gmail.com

ஜுன்: ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’க்கான மாதம்

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

2 thoughts on “இது பேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்

  1. மிகவும் உள்ளார்ந்த விவரங்களுடன் இதுவும் ஒருவகை நோய் என்பதை எழுத்தாளர் ஜெயசீலன் எளிய நடையில் விளக்கி இருக்கிறார். வாழ்த்துக்கள்

    Like

  2. கொரோனா பெருந்தொற்றில் நெருங்கிய உறவுகளை திடீரென இழந்து தவிப்போரை நன்கு புரிந்து கொள்ள…வழிக் காட்ட இந்த கட்டுரை பயன்படும். தேவையான நேரத்தில் விரிவான பயனுள்ள தகவல். நன்றி 🙏🏻

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started