இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 16,2021

Image Credits: School That Rock

கல்லூரியில் மாணவர்கள் கேலி செய்யப்படுவதைத் தவிர்க்க இயலாது என்னும் புரிதல் 1990-களில் தமிழ்நாட்டில் இருந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட பிறகு, 1997-ல் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ராகிங்குக்கு எதிரான சட்டம், இக்கொடும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்லூரிகளில் ‘ராகிங் இல்லா வளாகம்’ அமையவும், கேலிக்குள்ளாகிறவர்கள் புகார் தெரிவிப்பதற்கான அமைப்பு கல்லூரிகளில் ஏற்படவும் இச்சட்டம் வழிவகை செய்தது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, இணையம் போன்றவற்றின் வழியாக மிரட்டப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இச்சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தகவல்தொடர்புச் சாதனங்களால் மிரட்டப்படு வதை, “நவீனத் தொடர்புச்சாதன வலைதளங்களான செல்பேசி, இணையதளம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுத்தவரின் உடல் அமைப்பு, அறிவுத் திறன், குடும்பப் பின்னணி, ஆடைத் தேர்வு, தாய்மொழி, பிறந்த இடம், அணுகுமுறை, இனம், சாதி, வர்க்கம், பெயர் போன்றவற்றைப் பழிப்பது, கேலி செய்வது, இழிவுபடுத்துவதன் வழியாக வசைகூறுவது / சீண்டுவது” என இந்தியக் குற்றவியல் நிபுணர் ஜெய்சங்கர் வரையறுத்துள்ளார்.

பாதுகாப்போடும் பொறுப்போடும் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்கின்ற நான்சி வில்லார்டு (Nancy E. Willard), தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியாக மிரட்டுவதை எட்டு வகைகளாகப் பிரிக்கிறார்.

1.கொழுந்துவிட்டெரிவது (Flaming): குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வழியாக மரியாதைக்குறைவான, நாகரீகமற்ற, அல்லது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, கோபமாகப் பதில் சொல்லி சண்டைபோடுவது.

2.தொல்லைகொடுப்பது (Harassment): தனிநபரை மையப்படுத்தி, தரக்குறைவான, மரியாதையில்லாத, காயப்படுத்துகிற, அவமதிக்கிற செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்புவது.

3.இழிவுபடுத்துவது (Denigration): ஒருவரின் புகழைக் கெடுக்க, நட்பைச் சீர்குலைக்க, ஒருவரை இழிவுபடுத்த, கொடூரமான… இல்லாத பொல்லாத தகவல்களைச் சொல்லி புரணிகளைப் பரப்புவது, பதிவிடுவது, அனுப்புவது.

4. ஆள்மாறாட்டம் (Impersonation): போலியான கணக்கைத் தொடங்கி, அல்லது மற்றவரின் கணக்கை உடைத்து கருத்துக்கள், படங்கள், காணொலிகள் பதிவது. ஒருவருக்கு பிரச்சினை ஏற்படச் செய்யவும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும் முனைவது.

5. ஒதுக்குதல் (Exclusion): வேண்டுமென்றே மெய்நிகர் குழுவில் இருந்து அல்லது இணையவழி விளையாட்டில் இருந்து ஒருவரை நீக்குவது, ஒதுக்குவது, கண்டுகொள்ளாமல் இருப்பது.

6.பின்தொடர்தல் (Cyber-stalking): பயமுறுத்துகிற அல்லது மிரட்டுகிற குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களை தொடர்ந்து அனுப்பி ஒருவரை எப்போதும் அச்சத்துடனேயே வைத்திருப்பது.

7.வெளியிடுவது (Outing) ஒருவரின் தனிப்பட்ட, அல்லது அடுத்தவருக்குத் தெரிந்துவிட்டால் அவமானம் ஏற்படுத்தக்கூடிய, முக்கியமான தகவல்களை மெய்நிகரில் பதிவிடுவது மற்றும் பகிர்வது. பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்களைப் பதிவிடுவது மற்றும் பகிர்வது.

8.தந்திரம் (Trickery): சூழ்ச்சி செய்து, மற்றவர்களின் ரகசியத்தைப் பெறுவது, முக்கியமான தகவல்களைப் பெற்று பொதுவெளியில் பரப்புவது.

நேருக்கு நேர் மிரட்டப்படுவதற்கும், தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியாக மிரட்டப்படுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னது கல்வி நிலையங்கள், பணித்தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என அத்தோடு முடிந்துவிடுகின்றன. ஆனால், பின்னது, நீங்கள் பள்ளியில் இருந்தாலும், வேலை செய்தாலும், பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் உங்களைத் துரத்தும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், மின்னஞ்சல் போன்ற சமூக வலைதளங்களிலிருந்து நீங்கள் வெளியேறலாம், தொல்லை தரும் சமூக வலைதளக் கணக்குகளைத் தடுக்கலாம், திறன்பேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சாதாரண செல்பேசி வாங்கலாம், என்ன செய்தாலும் உங்களால் தப்பிக்க இயலாது. ஏனென்றால், மிரட்டுகிறவர்களின் முகங்களோ முகவரிகளோ பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவருக்குத் தெரிவதில்லை. போலியான கணக்கில் இருந்தே அவர்கள் மிரட்டுகிறார்கள். முன்பெல்லாம், ‘வலுவுள்ளவர்கள்தான் அல்லது ஆண்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள்’ என பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால், தகவல்தொடர்புச் சாதனம் வழியான மிரட்டல் அதை உடைத்துள்ளது. வயது, பாலினம், இனம், நாடு வேறுபாடின்றி அடுத்தவரை மிரட்டுகிறார்கள்.

பாதிப்புக்குள்ளாகும் பதின்பருவத்தினர்

உலக மக்கள்தொகையில் 60% பேர் இணையம் வழியாக அச்சுறுத்தப்படுதல், வசைகூறப்படுதல், துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், பதின்பருவச் சிறார்கள், அதிலும் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சென்னை மாணவர்களிடம் 2018-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 50% மாணவர்கள் தகவல்தொடர்புச் சாதன மிரட்டலுக்கு உள்ளானதாகவும், தங்கள் நண்பர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக 57% மாணவர்கள் சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.

மனித வளர்ச்சியில் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும் தனக்கான அடையாளத்தைத் தேடும் இப்பருவத்தில், குடும்பத்தின் பிடியிலிருந்து விலகிப் புதிய உறவுகளை ஏற்படுத்தச் சிறுவர்கள் முனை கிறார்கள். நண்பர்களையும் ஒத்த ரசனை உள்ளவர்களையும் தேடுகிறார்கள். அவர்களிடம் தயக்கமின்றித் தங்கள் கருத்துகள், உணர்வுகள், பொழுதுபோக்கு அனைத்தையும் பகிர்ந்து மகிழ்கிறார்கள். திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுப் பெறுகிறார்கள். தன்மீது ஆதிக்கம் செலுத்தாது, தன்னையொத்தச் சிறுவர்கள் வழங்கும் அறிவுரைகளுக்கும் ஆறுதல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இச்சிறுவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைச் சமூக வலைதளங்கள் கொடுக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத இணைய உலகம் அளிக்கும் மகிழ்வில் திளைத்து, ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடவுச்சொற்களில் தொடங்கி, தங்களைப் பற்றிய இதர தகவல்களையும், நிழற்படங்கள், காணொளிகளையும் விளையாட்டாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாணவர்களின் இத்தகைய அதீத ஆர்வமும் சுதந்திரமுமே அவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அவர்கள் பகிர்ந்த படங்களையும் தகவல்களையும் பலருக்கும் பகிர்வது, பொதுத்தளத்தில் பதிவுசெய்வது, ‘பதிவுசெய்துவிடுவேன்’ என மிரட்டுவது போன்றவற்றைப் பதின்பருவத்தினர் அதிகம் எதிர்கொள்கின்றனர். போலிக் கணக்குகளை உண்மையென நம்பி ஏமாந்துபோகின்றனர். உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த 16 வயது அட்னன் பத்ரவாலாவை, முன்பின் தெரியாத ஐந்து பேர் 2007-ல் ஆர்குட் வழியாகப் பின்தொடர்ந்து நண்பர்களானார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களைப் பார்க்க அட்னன் சென்றான். அட்னனைக் கடத்தி இரண்டு கோடி ரூபாய் கேட்ட ‘நண்பர்கள்’ மறுநாளே அவனைக் கொன்றுவிட்டார்கள்.

பதின்பருவத்துக் கல்லூரி மாணவி ஒருவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை என் செல்பேசி எண்ணை மாற்றிவிட்டேன். தெரியாதவர்களிடம் இருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் அடிக்கடி வந்ததால், எத்தனையோ இரவுகள் தூங்க முடியாமல் தவித்துள்ளேன். இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமலேயே இருந்துள்ளேன். வீட்டில் சொல்லவும் பயம். எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்கிற குழப்பம். இதிலிருந்து விடுபட வேறு வழி தெரியாதபோது வீட்டில் சொன்னேன். ‘உன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பயப்படாமல் தைரியமாக இரு’ என அண்ணனும் அப்பாவும் சொன்னார்கள். அதன் பிறகுதான் உயிர் வந்தது. கல்லூரிப் பாடங்கள் வாட்ஸ்அப் வழியாகப் பகிரப்படுவதால் வேறு வழியில்லாமல் திறன்பேசி பயன்படுத்துகிறேன்” என்றார். இவருக்குக் கிடைத்தது போன்று, மகனையும் மகளையும் புரிந்துகொள்கிற குடும்பம் எல்லோருக்கும் அமைவதில்லை.

தனிச் சட்டம் காலத்தின் அவசியம்

தகவல்தொடர்புச் சாதனம் வழியாக மிரட்டப்படுகிறவர்கள் தங்கள் உடல் முழுவதும் அச்சம் படர்வதை உணர்வார்கள். யாரை நம்புவது, யாரிடம் சொல்வது எனப் புரியாமல் தவிப்பார்கள். தன்னையே குற்றவாளிபோலக் கருதி நடந்துகொள்வார்கள். சமூகம், குடும்பம், நண்பர்களிடமிருந்து பிரிந்து, தனிமையில் உழல்வார்கள். செல்பேசியில் எந்த அழைப்பு வந்தாலும் பதற்றப்படுவார்கள். சுய மதிப்பு குறைந்து, பசி, தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு.

தகவல்தொடர்புச் சாதன மிரட்டலிலிருந்து ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பதின்பருவத்தினரைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் பயன்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளன. மாற்றுக் கருத்தாளர்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம் உள்ளிட்டவற்றையும் குறித்து வதந்திகளைப் பரப்புவதும், தகாத வார்த்தைகளால் சாடுவதும், எதிராளிகளின் செல்பேசி எண்களைப் பொதுவெளியில் பகிர்ந்து பலரையும் வசைபாடச் செய்வதும் அவர்களது பணிகளுள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்வதன் வழியாக இச்சமூகத்தைப் பெருமளவில் சீர்திருத்த முடியும்.

ஏற்கெனவே, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், எந்தெந்த வழிகளிலெல்லாம் தகவல்தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்பதை வரையறுத்து, முழுமையான தனிச் சட்டம் உருவாக்குவது அவசியம். இது அளப்பரிய மாற்றத்தை உருவாக்கும்!

– சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். 

Watch Movie in YouTube: Cyberbully (2011)

Cyberbully (2011) Movie Folder Icon by Kittycat159 on DeviantArt

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

One thought on “இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!

  1. மிகவும் அவசியமான தகவல். தினமும் நாமோ நம்மைச் சார்ந்தவர்களில் பலரோ அனுபவிக்கும் உணர்வு இது. நல்ல புரிதலைத் தந்தது. விடியல் பிறக்குமா… நன்றி 🙏🏻

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started