மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 30,2021

பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலி கொடுக்க குழந்தைகள் கடத்தப்படுவதை அடிக்கடி வாசிக்கிறோம். எங்கேயோ, யாரையோ கடத்தியிருக்கிறார்கள் என அடுத்தச் செய்திக்குக் கடந்துவிடுகிறோம். ஆனால், மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை.

ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்றச் சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டைவிட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர், போர், வன்முறை மற்றும் தொழில் சார்ந்து புலம்பெயர்கிறவர்கள், வீதியில் தங்குகிறவர்கள், மற்றும் உடல் நலமும் மனநலமும் குன்றியவர்களே ஆட்களைக் கடத்துகிறவர்களின் இலக்காக இருக்கிறார்கள்.

வகையும் வழிமுறையும்!

ஆட்களைக் கடத்துகிறவர்கள் பலவகை உண்டு. தனி ஒருவரே திட்டமிட்டுக் கடத்துவது, இருவர் மூவர் சேர்ந்து ஒருவரைக் கடத்திவிட்டு பிரிந்துவிடுவது, அமைப்பாகச் சேர்ந்து வலைப்பின்னலுடன் செயல்படுவது, ஒரு கிராமத்தையோ நகரையோ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்துவது. இவர்கள் அனைவருமே விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் மிக எளிதாக விரைவாகக் கடத்தலை நிறைவேற்றுகிறார்கள். மனிதக் கடத்தல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதும் கடத்தல்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.

பொதுவாக, கடத்தல் என்றாலே, குழந்தைகள் கடத்தப்படுவதை மட்டுமே பலரும் நினைக்கிறோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவும் 2019-ஆம் ஆண்டு இந்திய அளவில் 2260 பேரும், தமிழக அளவில் 16 பேரும் மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்னும் கூடுதலாக, பிச்சை எடுக்க, உறுப்புகள் திருட, வன்முறைகளில் ஈடுபடுத்த, மதுக்கூடங்களில் ஆட, மற்றும் பாலியல் தொழிலுக்காகக் கடத்துகிறார்கள் என யோசிக்கிறோம். ஆனால், நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வெளியூரிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அழைத்து வந்து விவசாயம், சமையல், சுரங்கம், தொழிற்சாலை, துணிக்கடை, மீன்பிடி, கட்டிடத் தொழில், வீட்டு வேலைகள் போன்றவற்றில் குறைந்தக் கூலிக்கு பல மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதும், சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பதும், கட்டாயத் திருமணம் செய்வதும் ஆட்கடத்தல்தான். அதனால்தான், ஆட்கடத்தலை நவீன அடிமை முறை என்கிறார்கள்.

“வட இந்திய தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு வந்தால், நம்ம ஊர் ஆட்கள்போல அடிக்கடி புகைபிடிக்க போக மாட்டார்கள், வெட்டியாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள், நிறைய நேரம் வேலை செய்வார்கள். கொடுக்கிற கூலியை வாங்கிக்கொள்வார்கள். வாக்குவாதம் செய்ய மாட்டார்கள்” என்றெல்லாம் மற்றவர்கள் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நாமேகூட பேசியிருக்கலாம். அப்போதெல்லாம், ஆட்கடத்தலுக்கு ஆதரவாக நாம் பேசியிருக்கிறோம்.

ஆட்கடத்தலுக்கு எதிரானச் சட்டம்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 370-ன்படி “சுரண்டும் நோக்கத்துடன் தன் வலிமையைக் காட்டி, வற்புறுத்தி, பொய்சொல்லி, மோசடி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூண்டுதலாக விளங்கி, பணம் கொடுத்தோ வாங்கியோ அல்லது வேறுவிதமான பலன்களைக் காட்டியோ பெற்றோரிடமிருந்து அல்லது பொறுப்பாளரிடமிருந்து ஆட்களைச் சேர்ப்பது (Recruits), அழைத்துச் செல்வது (Transports), அடைக்கலம் கொடுப்பது (Harbors), இடம் மாற்றுவது (Transfers), ஒரு நபர் அல்லது நபர்களைப் பெறுவது (Receive) அனைத்தும் ஆட்கடத்தலே.” மேலும், ‘கடத்தப்படுகிறவரின் சம்மதத்தின் பேரில்தான் அழைத்துச் சென்றோம், என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் சட்டம் வரையறுக்கிறது. மீட்கப்பட்டவரின் மறுவாழ்வு குறித்து இச்சட்டத்தில் எதுவும் இல்லையென்றாலும், கடத்தலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் வலியுறுத்திய ‘ஆட்கடத்தலுக்கு எதிரான மசோதா-2018’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் மாநிலங்களவையில் அம்மசோதா நிறைவேறவே இல்லை.

மனித மாண்பைக் காப்போம்

கடத்துகிறவர்கள் மீது வழக்குப் பதிந்து, தொடர்ச்சியாக வழக்காடி, தண்டணை வழங்குவதோடு இன்னும் சிலவற்றையும் நடைமுறைப்படுத்துவது நலம் பயக்கும். முதலாவது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது: வெளிநாட்டுப் பயணங்களின்போது, அங்குள்ள தொடர்வண்டி நிலையங்களில், “ஆட்கடத்தல் என்றால் என்ன? எவையெல்லாம் ஆட்கடத்தல் சட்டத்துக்குள் வருகிறது? கடத்துகிறவர்களுக்கான தண்டனை என்ன? கடத்தப்பட்டாலோ அல்லது வேறுயாராவது கடத்தப்படுவது தெரிந்தாலோ எந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வது?” போன்ற தகவல்கள் அசைபட (Animation) வடிவில் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். நம் அரசாங்கமும்கூட இதேமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இரண்டாவது, மீட்கப்படுகிறவர்களின் மனநலன் சார்ந்து திட்டமிடுவது: கடத்தப்பட்ட அனைவருமே, தாங்கள் தனியாகப் போனது, ஏமாந்தது, சிந்திக்காமல் சிக்கியது என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து தீவிரக் குற்ற உணர்வில் அவதிப்படுவார்கள். மதுரையில் தனியார் விடுதியில் தங்கி நான் கல்லூரியில் படித்தபோது, ஒரு மாணவன் திடீரென காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காவலர்களும் தேடத் தொங்கினார்கள். மறுநாள் இரவு பதினொரு மணிக்கு மிகவும் களைத்துப் போய் அவனாகவே வந்தான். முகவரி கேட்ட யாருக்கோ வழிகாட்டியதாகவும், நன்றியோடு அவர் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததாகவும் சொன்னான். அது மட்டும்தான் அவனுக்கு நினைவிலிருந்தது. மறுநாள் காலையில் ஓசூரில் சாலை ஓரம் கிடந்துள்ளான். எப்படி அங்கே சென்றான் என்பது தெரியவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் திரும்பி வந்துள்ளான். “நானா இப்படி ஏமாந்தேன்?” என கேட்டுக்கொண்டே பல நாட்கள் அவன் அவமானத்திலும் குற்ற உணர்விலும் தவித்தான்.

கடத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பாக இருந்த இடம், நடத்தப்பட்ட விதம், செய்த வேலை, தனிமை போன்றவைகளின் தீவிரத்தைப் பொறுத்து உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு (PTSD) இருக்கும். தனியாகச் செல்ல அச்சம், முன்பின் தெரியாதவர்களுடன் பேச பயம், நம்பிக்கையின்மை, தாழ்வுமனப்பான்மை, முற்றிலும் தோற்றுப்போன எண்ணம், அடிக்கடி களைப்பு, கோபம், தூக்கமின்மை, பசிக் கோளாறு, கொடூரச் சூழலில் இப்போதும் இருப்பது போன்ற மருட்சி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற எண்ணம் போன்றவற்றின் தாக்குதலில் துன்புறுவார்கள். இவர்களுக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான இடத்தை உறுதிப்படுத்துவதோடு, வாழ்க்கைத் திறன் பயிற்சிகளையும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆற்றுப்படுத்துநர்களுடன் இணைந்து இப்பணியைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.

மூன்றாவது, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடித் திட்டமிடுவது: இதைத்தான் மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நாளின் மையக் கருவாக, ‘பாதிக்கப்பட்டவர்களின் குரல்களே வழி காட்டுகின்றன’ (Victims’ voices lead the way) என ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு முன்மொழிந்துள்ளது. இக்குரல்கள்தான், கடத்தப்பட்டவர்களை மீட்கவும் வழிநடத்தவும் போகின்ற கதாநாயகர்கள் என புகழ்ந்துள்ளது. தங்களின் அறியாமையாலும், தவறான புரிதல்களாலும் சரியான உதவியைப் பெற முடியாமல் கடத்தப்பட்டவர்கள் தவிப்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆட்கடத்தலில் இருந்து தப்பித்தவர்களும் மீட்கப்பட்டவர்களும் பேசுவதற்குச் செவிமடுக்கவும் கற்றுக்கொள்ளவும் நாம் முன்வர வேண்டும் எனவும், இது, ‘பாதிக்கப்பட்டவரை மையப்படுத்திய’ (Victim-centered) ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை முன்னடுக்க உதவும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. மனிதக் கடத்தலுக்கு எதிரானப் பரப்புரையில் விழிப்போடு செயல்படுவது அரசு, சமூகம் அனைவரின் கடமையாகும்.

ஜுலை 30: ஆட்கடத்தலுக்கு எதிரான தினம்

சூ.ம.ஜெயசீலன்

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

sumajeyaseelan@gmail.com

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started