தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஆகஸ்ட் 04,2021

குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுக்கும் உன்னதப் பரிசு தாய்ப்பால். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் கிடைக்கும் சீம்பால் விலைமதிப்பற்றது. தாய்ப்பாலில் எல்லாவகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் காரணமாகிறது.

இரைப்பை சார்ந்த சிக்கல்கள், நிமோனியா, நீரிழிவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத் தொற்றிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் தாய்ப்பால் காக்கிறது. ஞாபக சக்தி, சிந்தனை திறன், அறிவு கூர்மை அதிகரிக்கிறது. பிறருடன் பழகுவதற்கும், தங்கள் உணர்வுகளை குழந்தைகள் ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் குடிப்பதற்குமான தொடர்பை நிறைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக, தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நரம்பு காப்புறை (Myelin), மூளையின் முழு அளவு, பெருமூளைப் புறணியின் அடர்த்தி, நரம்பு வெண்திசுவின் அளவு போன்றவை விரைவாக வளர்கின்றன. நரம்பிழைகள் (axon) வழியாக தகவல் பரிமாற்றம் விரைவாக நடப்பதற்கு நரம்பு காப்புறையாக்கம் (Myelination) மிகவும் முக்கியமானதாகும்.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்தப் பிறகான மனச்சோர்வுகளில் இருந்து தாய்மார்களைப் பாதுகாக்கிறது. குழந்தை பேற்றிற்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதைத் தாமதப்படுத்துகிறது. உடலில் எடை இழக்க உதவுகிறது. நீண்ட நல்ல உறக்கம் தருகிறது. குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோஸின் ஹார்மோன் சுரந்து தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி இரத்தப்போக்கு குறைகிறது.

மேலும், தாய்ப்பால் கொடுப்பது, பதட்டம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தங்கள் உணர்வுகளை ஒழுங்குபடுத்த உதவுவதால், மற்றவர்களுடனான நட்பும் உறவும் வலுப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள், குழந்தைகளை அதிகமாகத் தொடுவதாலும், குழந்தைகளின் தேவைகளை அதிகம் கவனிப்பதாலும், அதிகநேரம் முகமுகமாய் பார்த்துக்கொள்வதாலும் அவர்களுக்குள் பாச பிணைப்பு அதிகரிக்கிறது.

“குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். வேறு உணவோ, பானமோ ஏன் ஆறு மாதம் வரை தண்ணீர்கூட கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் மற்றும் அதனுடன் இணைந்து செல்கிற மற்ற உணவுகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும்” என யுனிசெஃப் சொல்கிறது. பாலூட்டுவதை அதிகரிப்பதன் வழியாக, உலக அளவில் ஐந்து வயதுக்குள்ளக இறக்கும் 820,000 குழந்தைகளைக் காப்பாற்ற முடியும், 20000 தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என ஐ.நா. குறிப்பிடுகிறது.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக 123 நாடுகளில் ஆய்வு செய்த யுனிசெஃபின் ஊட்டச்சத்துப் பிரிவு, 95% குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்போதும் கிடைப்பதாகச் சொல்கிறது. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 4% குழந்தைகளுக்கும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 21% குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளில் ஏழை மக்களும், ஏழை அல்லது நடுத்தர நாடுகளில் வருமானம் உள்ளவர்களும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில், பிறந்த ஒரு மணி நேரத்தில் 42% குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் கிடைக்கிறது. 55% குழந்தைகளே 0-6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கிறார்கள். தாய்ப்பால் கிடைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளை, குறிப்பாக வயிற்றுப்போக்கினாலும் நிமோனியாவினாலும் பலியாகாமல் காப்பாற்ற முடியும்.

தாய்ப்பால் கொடுக்க இயலாமை

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் எல்லா தாய்மார்களுக்கும் தெரியும். குழந்தை பெற்ற அனைவராலும் தாய்ப்பால் கொடுக்க இயலாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துதல்: ஆர்வத்துடன் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தாலும் பால்காம்பில் புண், வெடிப்பு, இரத்தம் வருதல், தாங்கமுடியாத வலி, மார்பில் தொற்று ஏற்படல், சீழ் உருவாதல், போதுமான பால் இல்லாமை, தொடர்ச்சியாக பால் வருவதில் சிக்கல், பலமணி நேரம் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டிய பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் குறுகிய காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை சிலர் நிறுத்துகிறார்கள்.  

கொடுக்கக் கூடாது: கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறவர்கள், தீவிர தொற்று, காசநோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில உடல், மன நோய்களுக்காக மருந்து சாப்பிடுகிறவர்கள், கீமோதெரபி எடுக்கிறவர்கள், போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானவர்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Herpes simplex) பாதிப்புள்ளவர்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றாலும் பால்காம்பில் வெடிப்போ புண்ணோ இருந்தால் கொடுக்கக் கூடாது.

கொடுக்க முடியாது: பால் கொடுக்கும் ஆவல் இருந்தாலும் பால் சுரக்கத் தூண்டுகின்ற சுரப்பி (prolactin) குறைவாக இருப்பவர்கள், பால் சுரக்கும் திசுக்கள் (Glandular tissue) போதுமான அளவு வளர்ச்சி பெறாதவர்கள், அறுவை சிகிச்சை மூலமாக மார்பளவு குறைக்கப்பட்டிருப்பவர்கள் பால் கொடுக்க முடியாது. பால் கொடுப்பதால் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட முந்தைய கொடூரங்கள் நினைவூட்டப்படும் என்றால் அவர்களாலும் முடியாது.

இயலாமையின் உளவியல் தாக்கம்

தாய்ப்பால் கொடுக்க முன்கூட்டியே முடிவெடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு, குழந்தை பிறந்த பிறகான மனச்சோர்வு குறைவாக இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் ஆசை தடைபடும்போது தீவிரமான உளவியல் தாக்கம் ஏற்படுகிறது. தாய்ப்பால் சுரப்பதிலும், குழந்தை பால் குடிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு, மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்ன பல்வேறு வழிமுறைகளையும் செய்து பார்த்தப் பிறகும் தீர்வு கிடைக்காதபோது தாய் முற்றிலும் சோர்ந்துபோகிறார். பால் கிடைக்காமல் தன் குழந்தை அழும்போதும், குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்காதபோதும் கவலையும் விரக்தியும் மனச்சோர்வை அதிகரிக்கின்றன.

தாய்ப்பால் கொடுக்கிற அம்மாதான் “நல்ல அம்மா” என்கிற எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பதால், கொடுக்க இயலாதவர்கள் தங்களைக் குற்றவாளிகளாக, தோற்றுப் போனவர்களாக, மோசமான அம்மாக்களாக நினைத்து குற்ற உணர்வுக்குள் உழல்கிறார்கள். போதாமையாலும், ஏமாற்றத்தாலும் கவலைப்படுகிறார்கள். உறவினர்களின், நண்பர்களின் கேள்விகளாலும், பார்வைகளாலும் தேவையற்ற அழுத்தத்தைச் சுமக்கிறார்கள். அவமானத்திலும், கோபத்திலும் கூடுதலாக மனச்சோர்வுறுகிறார்கள். இது, பால் சுரப்பதை மேலும் பாதிக்கிறது. “தாய்ப்பால் வழியாக கரோனா பரவுவதில்லை, தாய்க்கு கரோனா தொற்று இருந்தாலும் போதுமான முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் கொடுக்கலாம், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என நிறைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன” என யுனிசெஃப் சொல்கிறது. ஆனாலும், உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கேட்கும் தாய் பதட்டத்துடனேயே இருக்கிறார்.

அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் மருத்துவர்களும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிற அதே வேளையில், தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிக்கல்களையும், கொடுக்க இயலாது துயருருகிறவர்கள் தாங்களாக மீண்டு வருவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களைச் சங்கடப்படுத்துகின்ற சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற தாய்ப்பால் கொடுக்க இயலாததால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளைச் சொல்லி அறிவூட்ட வேண்டும். அக்கறை எனும் பெயரில் கேள்வி கேட்டு காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உடல், மன, மருத்துவ மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்களின் முடிவை நாம் மதிப்பது தாயின் மன நலனை மேம்படுத்தும், உடல் நலனை உறுதிப்படுத்தும், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும்.

ஆகஸ்ட் 1- 7 ‘உலக தாய்ப்பால் வாரம்’

சூ.ம.ஜெயசீலன்

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

sumajeyaseelan@gmail.com

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

4 thoughts on “தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!

  1. எதிர்கால தாய்மார்களுக்கு தேவைப்படுகின்ற பதிவு. வாழ்த்துக்கள்!

    Like

  2. நல்ல புரிதலைத் தந்தது.
    பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி 🙏🏻

    Like

  3. நல்ல புரிதலைத் தந்தது. பயனுள்ள தகவல். மிக்க நன்றி 🙏🏻

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started