தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!

இந்து தமிழ் திசையின், காமதேனு வார இதழில் வெளியான கட்டுரை, 18/11/2021

ஒவ்வொரு ஆண்டும் எச்.ஜ.வி., மலேரியா, மார்பகப் புற்றுநோய், கொலை மற்றும் போரினால் இறப்பவர்களைவிடத் தற்கொலையால் இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

2020-ல் இந்தியாவில் நிகழ்ந்த 1,53,052 தற்கொலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 16,883 தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 22 சம்பவங்கள் கூட்டுத் தற்கொலைகள் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது.

அக்கறை என்ற பெயரில்…

தன்னையே ஒருவர் மாய்த்துக்கொள்வதை ஆதரிப்போர் இல்லை. ஆனால், தற்கொலையை அவலச் சாவாகவும், நரகத்துக்கான சுய தேர்வாகவும் பேசுகிற சமூக மனநிலை, சமய நம்பிக்கை பெருமளவில் மாறவில்லை. தற்கொலை அல்லாது வேறு காரணங்களால் உயிரிழந்தவரின் உடலை வீட்டில் வைத்து சடங்குகள் செய்து, சமய நம்பிக்கைப்படி ஆலயங்களில் வழிபாடு நடத்தி பிறகு எரியூட்டுவதோ அல்லது அடக்கம் செய்வதோ பொதுவான வழக்கம்தான். தற்கொலை செய்தவர்களுக்கு பல சமூகங்களில் இந்தச் சடங்குகளும் வழிபாடுகளும் நடப்பதில்லை, கல்லறைகளிலும் அனுமதி கிடைப்பதில்லை. உறவுகள் அழுவதற்கும் நேரமில்லை.

இறந்தவருக்குச் செய்யும் சடங்குகள் அவருக்கானது மட்டுமேயல்ல. அவரைப் பிரிந்துள்ள குடும்பத்தினரின் வேதனை வடியவும், ஆறுதல் வழங்கவும், நம்பிக்கை வளர்க்கவுமான சமூக வழக்கம். ஆனால், தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகுவிரைவாக உடலுக்கு நெருப்பிட்டு அல்லது மண்ணிட்டு வந்திருக்கும் சில உறவுகளும் கிளம்பிவிடுகிறார்கள். ஏழாம் நாளிலோ நாற்பதாம் நாளிலோ மற்றுமொரு சடங்கு, அவ்வளவுதான். அவரவர் வேலையில் அவரவர் பரபரப்பு.

தற்கொலை செய்தவரின் குடும்பத்தினரோ, அவமானம், குற்ற உணர்வு, கோபம், வெறுப்பு, தனிமை உள்ளிட்ட உணர்வுச் சுழலில் சிக்கிச் சுழல்கிறார்கள். அக்கறை என்னும் பெயரில் ஏன், எதற்கு, எப்படி என்று புலனாய்வு செய்வதுடன் தற்கொலை செய்தவரை குடிகாரன், பொறுப்பற்றவன், பாவி, கோழை, நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்துகிறவர்களுக்கு மத்தியில் அவதியுறுகிறார்கள்.

நான்தான் காரணமோ!?

தற்கொலை செய்தவர்களது குடும்பத்தினரின் துயரமும் நோய், விபத்து, கொலை, இயற்கைப் பேரிடரில் உறவுகளை இழந்தவர்களின் துயரமும் வெவ்வேறானவை என்பதை எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக,

(1) ஏன் தற்கொலை செய்துகொண்டார்? நான் செலுத்திய பாசம் அவர் உயிர் வாழ்வதற்கு போதுமானதாக இல்லாமல் போய்விட்டதா? சிறிது நேரத்துக்கு முன்புகூட என்னோடு பேசிக்கொண்டுதானே இருந்தாள். ஏன் சொல்லாமல் போனாள்? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடும் தொடர் போராட்டம்.

(2) தற்கொலைக்கு நான்தான் காரணமோ? நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேன். நான் மட்டும் கோபப்படாமல் இருந்திருந்தால்? நான் மட்டும் அவள் கேட்கும்போது சரின்னு சொல்லியிருந்தால்? என்பதுடன், முன்கூட்டியே கவனிக்காமல் போய்விட்டேனே என்று தன்னையே குற்றம் சுமத்தி குற்ற உணர்வில் உழல்வது.

(3) தற்கொலை செய்த வழிமுறை குறித்து மிகப்பெரிய அவமானம், களங்கம் மற்றும் தற்கொலைதான் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மறைக்கவேண்டிய கட்டாயம்.

(4) ஊரில் நடக்கும் கூடுகைகள், திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகளில் ஒதுக்கப்படுவது மற்றும் தாங்களே ஒதுங்கிக்கொள்வது.

(5) நேசத்துக்குரியவர் தற்கொலை செய்து இறந்த பிறகு, குடும்பத்தினருக்கும் தற்கொலை எண்ணம் வருவது, போன்ற துயர உணர்வுகள் முன்னிலை பெறுகின்றன. தாய், தந்தை, பிள்ளை, கணவர், மனைவி என தற்கொலை செய்தவருடனான உறவு நெருக்கம் மற்றும் குடும்பத்தில் அவரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து துயரின் தீவிரம் அதிகரிக்கிறது. எதைக் குறித்தும் முடிவெடுக்க முடியாமல் வெறுமை சூழ்கிறது. எதிர்காலம் நெருப்பாய்ச் சுடுகிறது.

‘உங்கள் வலி புரிகிறது’ என சொல்லாதீர்!

தற்கொலை நடந்த பிறகு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உடலாலும், உணர்வாலும் நாம் உடனிருக்க வேண்டும். அவர்கள் தனியாக இல்லை என உணரச் செய்ய வேண்டும். ஆற்றாமையில் புலம்பும் அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதுடன், மிகவும் பொறுமை காக்க வேண்டும். ஒருபோதும் தீர்ப்பளிக்கக் கூடாது. தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது என்பதை புரிய வைத்து அவர்களின் குற்ற உணர்வு குறைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். உயிருடன் இருந்தபோது சொல்ல மறந்ததையும், தற்போது சொல்ல நினைப்பதையும் கடிதங்களாக எழுதச் சொல்லலாம். குடும்பத்தினரின் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதால், ‘உங்கள் வலி புரிகிறது’ என்று சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டும் நாள்!

விடுமுறைகள், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், பிறந்த நாட்கள், ஆண்டு நினைவு நாட்களில் தற்கொலை செய்தவர்களின் நினைவுகளும் உணர்வுகளும் குடும்பத்தினருக்கு மேலெழும். அந்நாட்களில் குடும்பத்தினரைச் சந்திப்பது நலம் பயக்கும். இதனாலேயே, தற்கொலை செய்தவர்களின் உறவினர்களுக்கான நாள் ஒவ்வோர் ஆண்டும் சனிக்கிழமைகளில் நினைவு கூறப்படுகிறது. அதாவது, நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் அமெரிக்க நன்றி நாளுக்கு முந்தைய சனிக்கிழமை.

குடும்பத்தினருடன் பேசும்போது, தற்கொலை செய்த முறையையும், அன்றைய நாளில் நடந்தவற்றையும் தவிர்த்து, இறந்தவரின் திறமைகள், நற்குணங்கள், மகிழ்ச்சியான நினைவுகள், பிரச்சினைகளை அவர் சமாளித்த விதம் போன்றவற்றை முன்னிறுத்திப் பேசலாம். இறந்தவரின் பெயரை அடிக்கடி குறிப்பிடுவது நல்லது. ‘பரவாயில்லை பெயரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்’ என குடும்பத்தினர் மகிழ்வார்கள். மிக முக்கியமாக, குடும்பத்தினரிடம், தற்கொலைக்கான அடையாளங்கள் ஏதும் தெரிகிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினரை சமூகத்துடன் உறவாட வைக்கவும், இயல்பான வாழ்வைத் தொடர வழிகாட்டவும் அமெரிக்காவில் ஆதரவு குழுக்கள் நிறைய செயல்படுகின்றன. தன்னைப்போலவே அன்புக்குரியவரை இழந்து வலியைச் சுமக்கிறவர்களின் கூடுகைகள் நம்பிக்கை அளிக்கின்றன. புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமாக வாழவும் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. இக்குழுவில் கலந்துகொணட பெக்கி ஆல்சன், “பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, குழந்தைகளை மற்றும் நண்பர்களை இழந்தவர்களுடன் என் கண்ணீரையும் அரவணைப்பையும் நான் பகிர்ந்துகொண்டேன். எங்கள் கதைகளைப் பகிர்வதன் வழியாக, இழப்பை வெளிப்படுத்துவது எவ்வளவு வேதனையானது என்பதை புரிந்துகொள்கிறவர்களாலும், இரக்கமிக்கவர்களாலும் நான் சூழப்பட்டிருப்பதை உணர்ந்தேன்” என்கிறார்.

கூடுகையை ஒருங்கிணைப்போம்!

தமிழ்நாட்டிலும் தன்னார்வ சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவு குழு கூடுகையை ஒருங்கிணைக்கலாம். இதற்கு அரசும் உரிய ஆதரவு நல்க வேண்டும். வேதனையில் சிக்குண்டு, ”ஏன் எனக்கு மட்டும் இப்படி?” என சுருண்டு கிடப்பவர்கள் சத்தமாக அழ முடியாமல், வாய்விட்டுப் பேச முடியாமல் காயத்தோடு வாழ்கிறவர்களின் உலகம் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். ஒருவர் மற்றவருக்கு நோய் தணிக்கும் மருந்தாவார்கள்.

அதேபோல, குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துவிட்டால் அதை குழந்தைகளுக்கும் பதின்பருவத்தினருக்கும் எப்படித் தெரியப்படுத்துவது? பள்ளியில் அல்லது விடுமுறை நாட்களில் மாணவரோ அல்லது ஆசிரியரோ தற்கொலை செய்துவிட்டால் மாணவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எப்படிச் சொல்லுவது? அவர்களின் உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்துவது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தற்கொலையால் தவிக்கும் குடும்பத்தினரை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்பதால் சமூக கடமை ஆற்ற எல்லாருமே விழிப்பாய் இருப்போம்.

Published by Su. Ma. Jeyaseelan

* இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தேன்! * தற்போது உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளேன்! * நான் ஒரு எழுத்தாளர்/ மொழிபெயர்ப்பாளர்! *இதுவரை நான் எழுதிய 19 நூல்கள் வெளிவந்துள்ளன! *அண்மையில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’, ‘என் பெயர் நுஜுத், வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது’ ஆகிய நூல்கள் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. #சென்னை புத்தகத் திருவிழா 2017-இல் சிறந்த கல்வி நூல் விருது பெற்ற என்னுடைய ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started