Featured

தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!

இந்து தமிழ் திசை நாளிதழின், ‘பெண் இன்று’ பகுதியில் வெளியான எனது கட்டுரை. ஜூன் 1, 2021.

கருவுற்றிருக்கும் ஒரு பெண் தான் குழந்தை பெற்றெடுக்கப்போவது குறித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். கரு சுமப்பவள் என்னவெல்லாம் வாசிக்க வேண்டும், யாருடைய இசையை ரசிக்க வேண்டும், என்ன படம் பார்க்கலாம், எதையெல்லாம் சாப்பிடலாம் போன்ற கேள்விகளுக்கு முகநூலில் கணவர்கள் விடை தேடுகிறார்கள். தாயும் சேயும் நலமுடன் இருக்க தன் மகளை அல்லது மருமகளை உடல் பரிசோதனைக்கு தவறாது பெண்கள் அழைத்துச் செல்கிறார்கள். உடல் நலனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலனுக்கும் கொடுங்கள் என சொல்லுகிறது உலக, தாய்க்குரிய மனநல நாள்.

விழிப்புணர்வு

2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல நாடுகளிலிருந்தும் பல்துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள். செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள் கலந்துரையாடினார்கள். தாய்க்குரிய மனநலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எல்லா நாடுகளும் கொள்கை முடிவெடுத்து அதைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள். அதன்படி, 2016ஆம் ஆண்டிலிருந்து மே மாதத்தின் முதல் புதன்கிழமை, தாய்க்குரிய மனநல நாளாகவும்,மே மாதம் முழுவதும் தாய்க்குரிய மனநல மாதமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்க்குரிய மனநலம்

மனநலம் என்பது, ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களை சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பு செய்வது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் அந்நபருடைய உளவியல், உடலியல் மற்றும் வளச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

பொதுவாக, தாய்க்குரிய மனநலன் என்பதை, அவள் கருவுற்றிருக்கும் காலம் தொடங்கி குழந்தை பிறந்த பிறகான 12 மாதங்கள் வரை கணக்கிடுகிறார்கள். கருவுற்ற பிறகு உடலில் நிகழும் மாற்றங்கள், எதிர்பார்ப்புகள், புதிய சவால்கள், கூடுதலான பொறுப்புகள் போன்றவற்றால் பதட்டமும் (Anxiety) மனச்சோர்வும் (Depression) இயல்பாகவே பெண்களுக்கு ஏற்படுகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்திய பெண்களின் நிலை

கருவுற்றிருந்த பெண்களிடமும், குழந்தை பெற்று 12 மாதங்கள் தாண்டாத பெண்களிடமும் இதுவரை குறைவான ஆய்வுகளே இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தாய்மாரின் மனநலனைப் பாதிக்கும் காரணிகளாக, பொருளாதார சிக்கல், பெற்றோர் ஏற்பாடு செய்யாத திருமணங்கள், திருமண முரண்பாடுகள், ஆண் குழந்தை வேண்டும் என்கிற எண்ணம்,  ஏற்கெனவே கரு கலைந்த துயர அனுபவம், குழந்தை இறந்து பிறந்தது, சிறப்புக் குழந்தையாகப் பிறந்தது, குடும்ப வன்முறை, கணவர் மதுவுக்கு அடிமையாக இருப்பது போன்றவற்றை இதுவரையிலான இந்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கருவுற்றிருக்கும் பெண்களிடம், தென்னிந்திய அளவில் 2019இல் ஆய்வு செய்த மருத்துவர் சுவர்ன ஜோதி மற்றும் பலர், கரு சுமக்கும் பெண்களிடம் மனச்சோர்வு அல்லது அதீத பதட்டம் (Generalized Anxiety Disorder) அல்லது மனச்சோர்வும் அதீத பதட்டமும் சேர்ந்தே இருப்பதாக வெளியிட்டுள்ளார்கள்.

தாய்க்குரிய அவதிகள்

கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனநல சிக்கல் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இருக்கும் ஏதாவது நோய், குழந்தை பெற்றெடுப்பது குறித்து சிறுவயது முதல் அவள் கேட்ட கதைகளின் தாக்கம், ஏற்கெனவே குழந்தை பெற்ற போது ஏற்பட்ட பயம், திட்டமிடப்படாத கர்ப்பம், உடல் மற்றும் உணர்வு ரீதியிலான குடும்ப வன்முறை, கிராமத்தில் இருந்து நகரத்தில் குடியேறிய தாயின் தனிமை, கணவர் கைவிட்டுவிட்டதால் தனி ஆளாக குழந்தையை வளர்ப்பது, குழந்தைக்கு தம்மால் ஏதும் பிழை நேர்ந்துவிடுமோ என்கிற பயம் போன்ற எண்ணற்ற காரணங்கள் தாயின் மன சமநிலையைக் குலைக்கின்றன. இவைகளைக் கவனிக்காமலும், சிகிச்சை அளிக்காமலுமே நாம் பெரும்பாலும் கடந்து போகிறோம்.

மனநல சிக்கல்கள் 

வாழ்க்கையில் மற்ற நேரங்களில் ஏற்படும் மனச்சோர்வுக்கான அதே அறிகுறிகளைத்தான் கருவுற்றிருக்கும் பெண்களிலும், குழந்தை பெற்றெடுத்த அன்னையரிலும் பார்க்கிறோம். உதாரணமாக, தூக்க குறைபாடு, பசியில் மாற்றம், கவனம் செலுத்த இயலாமை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான மனநிலை, எரிச்சல். ஆனால் கூடுதலாக, மனச்சோர்வுடைய இவர்கள் குழந்தையை சரிவர பார்க்க இயலவில்லையே எனும் குற்ற உணர்வுக்கும் ஆளாகிறார்கள்.

தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதை வெளிப்படுத்த அன்னையர்கள் தயங்குவதாகவும், தங்களை ‘நோயாளி’ அல்லது, ‘மோசமான தாய்’ என முத்திரை குத்திவிடுவார்கள் என அச்சப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதாரத்தில் ஏழ்மையான அல்லது நடுத்தரமான நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயேகூட 10 -15 விழுக்காடு பெண்கள் மனநல சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். 

குழந்தைகளுக்கு பாதிப்பு

தாயின் மனநல சிக்கலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு நிறைவாக வளராதது, குறைவான எடையுடன் பிறப்பது, குறை பிரசவம், நோய் மற்றும் தொற்று எளிதில் குழந்தைகளைத் தாக்குவது என பல வகைகளில் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகள் வளர்ந்த பிறகு, சமூகத்தில் பிறருடன் இயைந்து பழகுவதிலும் தடுமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

ஆதரவு குழுக்கள்

மனநலச் சிக்கலில் உள்ள கருவுற்ற பெண்களுக்கு இந்தியாவில் போதுமான ‘சமூக ஆதரவு’ கிடைப்பதில்லை என மருத்துவர் சுவர்ன ஜோதி தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார். அதேவேளையில், தாயின் மனநலனை மீட்டெடுப்பதில் மிகப்பெரிய பங்கு ஆதரவு குழுக்களுக்கு (Support Groups) இருப்பதாக உலக அளவில் எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மனச்சோர்வு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவரும் உளவியலாளர் ஆரோன் பெக், ‘ஆதரவு குழுக்கள்’ கூடும்போது, ‘நான் தனியாக இல்லை’ என்னும் நம்பிக்கையை ஒரு தாய் பெறுகிறார். கணவர்களும் மனைவியர்களும் கூடுகின்ற ‘ஆதரவு குழுக்கள்’ கூட்டங்களில் கஷ்டங்களைச் சமாளிக்கிகிற நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் அறிவதோடு, சிறப்பாக செயல்படுதவற்கான பாராட்டுக்களையும் அவர்கள் பெறுகிறார்கள். யாரும் நம்மை தவறாக நினைப்பார்களோ என்னும் கலக்கமின்றி, தங்களின் பயத்தையும், தேவைகளையும் பற்றி கலந்துரையாடுகிறார்கள் என்கிறார்.

நாம் சொல்ல வேண்டியது

பதட்டத்தோடும், மனச்சோர்வுடனும் இருக்கும் அன்னையரிடம் நாம் அடிக்கடி சொல்ல வேண்டிய மூன்று நல்வாக்கியங்கள், (1) நீங்கள் தனியாக இல்லை. நண்பர்களும் உறவினர்களும் உங்களோடு இருக்கிறோம். (2) உங்களுக்கு ஏற்படும் பதட்டத்துக்கும் மனச்சோர்வுக்கும் உங்களை நீங்களே குற்றம் சுமத்த வேண்டியதில்லை (3) உங்களுக்கு உதவி செய்வதற்கும் வழிகாட்டுவதற்கும் மருத்துவர்களும், மனநல ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டியது

நாம் வாழ்கின்ற பகுதிகளில் கருவுற்றுள்ள பெண்களும், குழந்தை பெற்று ஓராண்டுக்குள் இருக்கும் அன்னையரும் வாரம் ஒருமுறை கூடி கலகலப்பாக பேசுவதை தனித்தனியாக ஒருங்கிணைக்கலாம். மனநல மருத்துவர், செவிலியர் போன்றோரை வரவழைத்து சந்தேகங்களைத் தீர்க்கவும், ஊக்கப்படுத்தவும் செய்யலாம். தாய்க்குரிய மனநலனுக்கான திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்தை அறிவுறுத்தலாம். நாமும் தாய்க்குரிய மனநலனுக்கான விழிப்புணர்வு தூதுவர்களாகலாம்!

 https://www.hindutamil.in/news/supplements/penn-indru/677307-the-mental-health-of-mothers-should-not-be-forgotten.html

சூ.ம.ஜெயசீலன்

தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!

இந்து தமிழ் திசையின், காமதேனு வார இதழில் வெளியான கட்டுரை, 18/11/2021

ஒவ்வொரு ஆண்டும் எச்.ஜ.வி., மலேரியா, மார்பகப் புற்றுநோய், கொலை மற்றும் போரினால் இறப்பவர்களைவிடத் தற்கொலையால் இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

2020-ல் இந்தியாவில் நிகழ்ந்த 1,53,052 தற்கொலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 16,883 தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 22 சம்பவங்கள் கூட்டுத் தற்கொலைகள் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது.

அக்கறை என்ற பெயரில்…

தன்னையே ஒருவர் மாய்த்துக்கொள்வதை ஆதரிப்போர் இல்லை. ஆனால், தற்கொலையை அவலச் சாவாகவும், நரகத்துக்கான சுய தேர்வாகவும் பேசுகிற சமூக மனநிலை, சமய நம்பிக்கை பெருமளவில் மாறவில்லை. தற்கொலை அல்லாது வேறு காரணங்களால் உயிரிழந்தவரின் உடலை வீட்டில் வைத்து சடங்குகள் செய்து, சமய நம்பிக்கைப்படி ஆலயங்களில் வழிபாடு நடத்தி பிறகு எரியூட்டுவதோ அல்லது அடக்கம் செய்வதோ பொதுவான வழக்கம்தான். தற்கொலை செய்தவர்களுக்கு பல சமூகங்களில் இந்தச் சடங்குகளும் வழிபாடுகளும் நடப்பதில்லை, கல்லறைகளிலும் அனுமதி கிடைப்பதில்லை. உறவுகள் அழுவதற்கும் நேரமில்லை.

இறந்தவருக்குச் செய்யும் சடங்குகள் அவருக்கானது மட்டுமேயல்ல. அவரைப் பிரிந்துள்ள குடும்பத்தினரின் வேதனை வடியவும், ஆறுதல் வழங்கவும், நம்பிக்கை வளர்க்கவுமான சமூக வழக்கம். ஆனால், தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வெகுவிரைவாக உடலுக்கு நெருப்பிட்டு அல்லது மண்ணிட்டு வந்திருக்கும் சில உறவுகளும் கிளம்பிவிடுகிறார்கள். ஏழாம் நாளிலோ நாற்பதாம் நாளிலோ மற்றுமொரு சடங்கு, அவ்வளவுதான். அவரவர் வேலையில் அவரவர் பரபரப்பு.

தற்கொலை செய்தவரின் குடும்பத்தினரோ, அவமானம், குற்ற உணர்வு, கோபம், வெறுப்பு, தனிமை உள்ளிட்ட உணர்வுச் சுழலில் சிக்கிச் சுழல்கிறார்கள். அக்கறை என்னும் பெயரில் ஏன், எதற்கு, எப்படி என்று புலனாய்வு செய்வதுடன் தற்கொலை செய்தவரை குடிகாரன், பொறுப்பற்றவன், பாவி, கோழை, நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்துகிறவர்களுக்கு மத்தியில் அவதியுறுகிறார்கள்.

நான்தான் காரணமோ!?

தற்கொலை செய்தவர்களது குடும்பத்தினரின் துயரமும் நோய், விபத்து, கொலை, இயற்கைப் பேரிடரில் உறவுகளை இழந்தவர்களின் துயரமும் வெவ்வேறானவை என்பதை எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக,

(1) ஏன் தற்கொலை செய்துகொண்டார்? நான் செலுத்திய பாசம் அவர் உயிர் வாழ்வதற்கு போதுமானதாக இல்லாமல் போய்விட்டதா? சிறிது நேரத்துக்கு முன்புகூட என்னோடு பேசிக்கொண்டுதானே இருந்தாள். ஏன் சொல்லாமல் போனாள்? போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடும் தொடர் போராட்டம்.

(2) தற்கொலைக்கு நான்தான் காரணமோ? நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேன். நான் மட்டும் கோபப்படாமல் இருந்திருந்தால்? நான் மட்டும் அவள் கேட்கும்போது சரின்னு சொல்லியிருந்தால்? என்பதுடன், முன்கூட்டியே கவனிக்காமல் போய்விட்டேனே என்று தன்னையே குற்றம் சுமத்தி குற்ற உணர்வில் உழல்வது.

(3) தற்கொலை செய்த வழிமுறை குறித்து மிகப்பெரிய அவமானம், களங்கம் மற்றும் தற்கொலைதான் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் மறைக்கவேண்டிய கட்டாயம்.

(4) ஊரில் நடக்கும் கூடுகைகள், திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகளில் ஒதுக்கப்படுவது மற்றும் தாங்களே ஒதுங்கிக்கொள்வது.

(5) நேசத்துக்குரியவர் தற்கொலை செய்து இறந்த பிறகு, குடும்பத்தினருக்கும் தற்கொலை எண்ணம் வருவது, போன்ற துயர உணர்வுகள் முன்னிலை பெறுகின்றன. தாய், தந்தை, பிள்ளை, கணவர், மனைவி என தற்கொலை செய்தவருடனான உறவு நெருக்கம் மற்றும் குடும்பத்தில் அவரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து துயரின் தீவிரம் அதிகரிக்கிறது. எதைக் குறித்தும் முடிவெடுக்க முடியாமல் வெறுமை சூழ்கிறது. எதிர்காலம் நெருப்பாய்ச் சுடுகிறது.

‘உங்கள் வலி புரிகிறது’ என சொல்லாதீர்!

தற்கொலை நடந்த பிறகு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உடலாலும், உணர்வாலும் நாம் உடனிருக்க வேண்டும். அவர்கள் தனியாக இல்லை என உணரச் செய்ய வேண்டும். ஆற்றாமையில் புலம்பும் அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதுடன், மிகவும் பொறுமை காக்க வேண்டும். ஒருபோதும் தீர்ப்பளிக்கக் கூடாது. தற்கொலைக்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது என்பதை புரிய வைத்து அவர்களின் குற்ற உணர்வு குறைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். உயிருடன் இருந்தபோது சொல்ல மறந்ததையும், தற்போது சொல்ல நினைப்பதையும் கடிதங்களாக எழுதச் சொல்லலாம். குடும்பத்தினரின் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதால், ‘உங்கள் வலி புரிகிறது’ என்று சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டும் நாள்!

விடுமுறைகள், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள், பிறந்த நாட்கள், ஆண்டு நினைவு நாட்களில் தற்கொலை செய்தவர்களின் நினைவுகளும் உணர்வுகளும் குடும்பத்தினருக்கு மேலெழும். அந்நாட்களில் குடும்பத்தினரைச் சந்திப்பது நலம் பயக்கும். இதனாலேயே, தற்கொலை செய்தவர்களின் உறவினர்களுக்கான நாள் ஒவ்வோர் ஆண்டும் சனிக்கிழமைகளில் நினைவு கூறப்படுகிறது. அதாவது, நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் அமெரிக்க நன்றி நாளுக்கு முந்தைய சனிக்கிழமை.

குடும்பத்தினருடன் பேசும்போது, தற்கொலை செய்த முறையையும், அன்றைய நாளில் நடந்தவற்றையும் தவிர்த்து, இறந்தவரின் திறமைகள், நற்குணங்கள், மகிழ்ச்சியான நினைவுகள், பிரச்சினைகளை அவர் சமாளித்த விதம் போன்றவற்றை முன்னிறுத்திப் பேசலாம். இறந்தவரின் பெயரை அடிக்கடி குறிப்பிடுவது நல்லது. ‘பரவாயில்லை பெயரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்’ என குடும்பத்தினர் மகிழ்வார்கள். மிக முக்கியமாக, குடும்பத்தினரிடம், தற்கொலைக்கான அடையாளங்கள் ஏதும் தெரிகிறதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினரை சமூகத்துடன் உறவாட வைக்கவும், இயல்பான வாழ்வைத் தொடர வழிகாட்டவும் அமெரிக்காவில் ஆதரவு குழுக்கள் நிறைய செயல்படுகின்றன. தன்னைப்போலவே அன்புக்குரியவரை இழந்து வலியைச் சுமக்கிறவர்களின் கூடுகைகள் நம்பிக்கை அளிக்கின்றன. புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமாக வாழவும் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. இக்குழுவில் கலந்துகொணட பெக்கி ஆல்சன், “பெற்றோரை, உடன் பிறந்தவர்களை, குழந்தைகளை மற்றும் நண்பர்களை இழந்தவர்களுடன் என் கண்ணீரையும் அரவணைப்பையும் நான் பகிர்ந்துகொண்டேன். எங்கள் கதைகளைப் பகிர்வதன் வழியாக, இழப்பை வெளிப்படுத்துவது எவ்வளவு வேதனையானது என்பதை புரிந்துகொள்கிறவர்களாலும், இரக்கமிக்கவர்களாலும் நான் சூழப்பட்டிருப்பதை உணர்ந்தேன்” என்கிறார்.

கூடுகையை ஒருங்கிணைப்போம்!

தமிழ்நாட்டிலும் தன்னார்வ சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவு குழு கூடுகையை ஒருங்கிணைக்கலாம். இதற்கு அரசும் உரிய ஆதரவு நல்க வேண்டும். வேதனையில் சிக்குண்டு, ”ஏன் எனக்கு மட்டும் இப்படி?” என சுருண்டு கிடப்பவர்கள் சத்தமாக அழ முடியாமல், வாய்விட்டுப் பேச முடியாமல் காயத்தோடு வாழ்கிறவர்களின் உலகம் இருப்பதைக் கண்டுகொள்வார்கள். ஒருவர் மற்றவருக்கு நோய் தணிக்கும் மருந்தாவார்கள்.

அதேபோல, குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்துவிட்டால் அதை குழந்தைகளுக்கும் பதின்பருவத்தினருக்கும் எப்படித் தெரியப்படுத்துவது? பள்ளியில் அல்லது விடுமுறை நாட்களில் மாணவரோ அல்லது ஆசிரியரோ தற்கொலை செய்துவிட்டால் மாணவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எப்படிச் சொல்லுவது? அவர்களின் உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்துவது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தற்கொலையால் தவிக்கும் குடும்பத்தினரை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்பதால் சமூக கடமை ஆற்ற எல்லாருமே விழிப்பாய் இருப்போம்.

நம் வாழ்வு நமதென்போம்!

இந்து தமிழ் திசை, இணைய பக்கத்தில் வெளியான என் கட்டுரை, நவம்பர் 03, 2021.

இயல்பிலேயே ஒவ்வொருவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சவால்கள், சங்கடங்கள், கொந்தளிப்புகளைச் சமாளித்து முன்னேறுகிறவர்கள். ஆனாலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக ஆண்களைவிட அதிகமான பெண்கள் மன அழுத்தத்தால் (stress) அவதிப்படுகின்றனர்.

நாள்பட்ட மன அழுத்தம் பதற்றம், மனச்சோர்வு, தூக்கக் கோளாறு, செரிமானப் பிரச்சினை, மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளிட்ட மனநலச் சிக்கல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இட்டுச் செல்வதால், மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளைக் கற்பிக்கவும்1998 முதல் ‘உலக மன அழுத்த விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

நிகழ்வுகளும் எதிர்வினைகளும்

தேர்வு காலம், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளின் அருகாமை, அலுவலகத்துக்குச் செல்லும் காலைப்பொழுது, போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டுதல், கூட்டத்துக்குத் தாமதமாதல், மறுக்க முடியாமல் பல்வேறு பணிகளை ஏற்றுக்கொள்ளுதல், நாம் பேசும்போது மற்றவர்கள் கவனிக்காதது, வாகனம் பழுதடைவது, செல்பேசியில் சார்ஜ் இல்லாதது, குழந்தை அல்லது இணையருடன் ஏற்படும் வாக்குவாதம் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளின் மீதான நம் எதிர்வினைகளே மன அழுத்தமாகின்றன. வருவதும் போவதும் தெரியாமல் நம் நிகழ்பொழுதைச் சீரற்றதாக்கும் இவை நுண்கடும் (acute) மன அழுத்தம்எனப்படுகின்றன.

யாருக்கு ஏற்படும்?

வீடுகளில், காப்பகங்களில் நீண்ட நாட்கள் நோயுற்றிருப்பவர்களையும், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகள் போன்றோரைப் பல ஆண்டுகளாகப் பராமரிக்கிறவர்கள் நாள்பட்ட (chronic) மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

கல்வி, பணி உயர்வு, வெற்றி, எதிர்பார்ப்புகள், திருமணம், நோயுறுவது, விபத்து, வேலை இழப்பு, நெருங்கியவரின் இறப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ‘இந்த மாற்றங்கள் இயல்பானவைதாம், நல்வாழ்வுக்கான அச்சுறுத்தல் இல்லை’ என்கிற புரிதல் உள்ளவர்கள் புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள். மற்றவர்கள் மன அழுத்தத்திற்கு இரையாகிறார்கள். அதைப் பற்றியே தொடர்ந்து தீவிரமாக யோசிப்பதால், கவலைப்படுவதால் மனச்சோர்வுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

எதிர்கொள்ளும் விதம்

நம் எதிர்பார்ப்புக்கு மாறான நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளும் விதமே எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் நாம் அமிழ்ந்திருக்கிறோம் என்பதைச் சொல்லிவிடும். குறிப்பாக, சாதாரண பிரச்சினைகூட உயிர்போகிற காரியம்போல செயல்படுகையில் மிக மோசமானதாக மாறிவிடுகிறது. குழப்பச் சூழலைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், வெவ்வேறு வழிமுறைகளைச் சிந்திக்கவும் விடாமல் தடுக்கிறது. சொல்ல நினைத்ததைக் கடைசிவரை சரியாகச் சொல்ல முடியாமல் போகிறது. அதேபோல, இரவு பகலாக நாம் விரும்பிச் செய்து முடித்த ஒன்றை மகிழ்ந்து அனுபவிக்க இயலாத மனநிலையில் மருகுகிறோம்.

கையாளும் விதம்

“மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள், எப்படி அதைக் கையாள்கிறீர்கள் என்பதே, அந்நிகழ்வு மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லுமா செல்லாதா என்பதை முடிவு செய்யும்” என்கிறார் உளவியலாளர் செலிக்மன். உதாரணமாக, தொடர்வண்டியில் ஏறுவதற்கு முன்பாக பணம் எடுக்க ஏ.டி.எம்., சென்றார் நண்பர் ஜெகன். நீண்ட வரிசையில் நின்றார். நேரம் ஆனது. பணம் எடுக்கத் தெரியாமல் சிலர் தடுமாறினார்கள்.

காத்திருந்த பலரும் அதைப் பெரிதுபடுத்தாமல் அலைபேசியில் பரபரப்பாக இருந்தார்கள். ஜெகனால் ஒரு நிலையில் நிற்க முடியவில்லை. மணியை அடிக்கடி பார்த்தார். தரையை உதைத்துக்கொண்டே நின்றார். தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில், “வேகமா எடுத்துட்டு வாங்கங்க. எப்படி எடுக்குறதுன்னு தெரியலைன்னா, தெரிஞ்சவங்களக் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியதுதானே” எனக் கத்தினார். வரிசையில் நின்ற சிலர் அவரை விசித்திரமாகப் பார்த்தார்கள்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தம் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெகன் விபத்தில் சிக்கினார். ஜெகனுக்கு அதிக அடி இல்லை. நண்பர் உயிருக்குப் போராடினார். விரைந்து எழுந்த, ஜெகன் உடனடியாக தன் சட்டையைக் கழற்றி நண்பரின் காயத்தின் மீது கட்டுப் போட்டார். ஆம்புலன்சுக்கும் வீட்டுக்கும் தகவல் சொன்னார். ஆம்புலன்ஸ் வந்த பிறகே உடலும் மனமும் களைத்து அமர்ந்தார். எல்லோரும் அவரின் தைரியத்தைப் பாராட்டினார்கள். தான் சுறுசுறுப்பாக இயங்கியதை ஜெகனாலேயே நம்ப இயலவில்லை.

இரண்டு நிகழ்வுகளுமே மன அழுத்தத்திற்கான காரணிகள்தாம் என்றாலும் இரண்டையும் ஜெகன் பார்த்த, கையாண்ட விதம் வெவ்வேறானவை. முதல் நிகழ்வில், சரியான திட்டமிடல் இல்லாமல் ஏ.டி.எம்., சென்றதால் எழுந்த அழுத்தத்தில் கத்தினார். இரண்டாவது நிகழ்வில், நண்பரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வேகம் மட்டுமே இருந்தது.

வீடு, அலுவலகம், கடைகள், கூட்டங்களில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப் பழகினால், பல நிகழ்வுகள் மன அழுத்தத்துக்குரியவையாகவே இருக்காது அல்லது குறைந்த மன அழுத்தத்திற்குரியவையாக இருக்கலாம். பயனுள்ள நிகழ்வாகத் தோன்றலாம், மேலும் அச்சூழலைச் சமாளிக்கும் வழிமுறைகள் வசப்படலாம்.

ஆரோக்கியமாக வாழலாம்

ஆரோக்கியமான உணவு, தினமும் உடற்பயிற்சி, தியானம், நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும் பயிற்சி, போதுமான தூக்கம், அன்பும் ஆதரவுமான குடும்பம், நண்பர்கள், உறவினர்களுடனான நெருக்கம், இணக்கமான உறவு, உதவுதல், மன்னித்தல், நற்சிந்தனையுடன் ஒன்றிணைந்திருக்கும் குழுக்களுடன் செயல்படுவது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவை மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை நமக்கு அளிக்கும்.

இவற்றுடன் சவால்களைக் கையாளும் நம் திறமை மீதான நம்பிக்கை, ஒரு மனிதராக நம்மைப் பற்றிய நமது எண்ணம், மாற்றங்களின் மீதான நமது பார்வை, பல்வேறு வாய்ப்புகள் குறித்த நமது தேடல் உள்ளிடவை சேரும்போது மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். இந்தப் பண்புகளை நாம் தினமும் பின்பற்றினால், அவற்றால் கிடைக்கும் ஆற்றலை தினமும் சேமித்தால், அதன் பலன்களை ஆண்டு முழுவதும் நாம் அறுவடை செய்ய முடியும். ஆரோக்கியமாக வாழ முடியும்.

சூ.ம.ஜெயசீலன்,

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com.

மனநலப் பாதுகாப்பை நனவாக்குவோம்!

இந்து தமிழ் திசை, இணைய பக்கத்தில் வெளியான என் கட்டுரை, அக்.10, 2021

மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவை அந்நபருடைய உளவியல், உடலியல் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது ஆகும்.

மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், உலகில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலச் சிக்கலால் அவதியுறுகிறார்கள். குறைவான வருமானம் உள்ள நாடுகளில் மனநலச் சிக்கலோடு வாழும் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதேயில்லை. ஒவ்வோர் ஆண்டும், போதை / மதுவினால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

வாழ்வைச் சிக்கலுக்கு இட்டுச் செல்லும் மனநலப் பிரச்சினைகள் குறித்து உலகெங்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று ‘உலக மனநல நாள்’ உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அவரே பேச வைப்பார்

மனவியல், உளவியல் பிரச்சினைகளால் துன்புறுகிறவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கோவில்கள், நண்பர்கள், பெரியவர்கள், பேய் ஓட்டுதல் என ஒவ்வொருவரிடமும் அழைத்துச்சென்று காலத்தைச் சிலர் வீணடிக்கிறார்கள். நண்பர்களும் பெரியவர்களும் தவறாகவா வழிகாட்டுவார்கள்எனக் கேட்கலாம். அப்படியல்ல. ஓர் உதாரணம் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஒருவர் திடீரென நோயுற்றார். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிந்தது. வயிற்றில் புற்றுநோய் இருக்குமோ என்கிற ஐயத்தில் அடுத்தடுத்த பரிசோதனைகள் தொடர்ந்தன. ‘வருவதை ஏற்றுக்கொள்ளவும் தைரியமாக இருக்கவும்’ பலரும் அப்பெண்ணுடன் பேசினார்கள். இரண்டு வாரம் கழித்து, ஆற்றுப்படுத்துநரும் பேசினார். ஆற்றுப்படுத்துநருடனான சந்திப்புக்குப் பிறகு “இப்போது எப்படி இருக்கிறது?” என அப்பெண்ணிடம் குடும்பத்தினர் கேட்டார்கள். “இவர் என்னைப் பேச வைத்தார். இப்போது மனம் லகுவாக இருக்கிறது” என்றார் அப்பெண். ஆமாம், நண்பர்களும் பெரியவர்களும் பேசுவார்கள், அறிவுரை சொல்வார்கள். ஆற்றுப்படுத்துநர், மனநலச் சிக்கலில் உள்ளவரைப் பேச வைப்பார். பாதிக்கப்பட்டவரே முடிவெடுக்க வழிகாட்டுவார்.

ஒத்துழைப்பும் பொறுமையும்

நாம் மருத்துவமனைக்குச் செல்லும்போது, நோய்க்கான காரணத்தை அறிய அலோபதி மருத்துவர் பல்வேறு பரிசோதனைகள் செய்யச் சொல்வார். என்ன நோய் என்பதையும் அதன் தீவிரத்தையும் பரிசோதனையின் முடிவுகள் தெளிவுபடுத்தும். தேவையேற்படின் மேலதிக பரிசோதனை செய்யவும் மருத்துவர் பரிந்துரைப்பார். என்ன நோய் எனக் கண்டறிந்தபிறகு சிகிச்சை தொடங்குவார். நாம் விரும்பாமல் விழுங்கினால்கூட, தூங்கினாலும் விழித்திருந்தாலும் மருந்து குணமளிக்கும் பணியைச் செய்யும்.

மனநல சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. சுகம் பெற வேண்டுமென்றால் நோயுற்றவரின் முழு ஒத்துழைப்பு அவசியம். என்ன நோய் என்பதையும் அதன் காரணத்தையும் புரிந்துகொள்ள அடுத்தடுத்த கேள்விகளோடு மனநல மருத்துவர் வழிநடத்தும்போது எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும். வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் ஏதோ ஒரு குறிப்பிட்ட நிகழ்வுதான் நோயின் தூண்டுதலாக (Triggering Point) இருந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நோயின் தீவிரத்தைக் கண்டறிய சில பயிற்சிகள் கொடுக்கும்போது தவறாமல் செய்ய வேண்டும்.

நேடியாகச் சென்று பார்க்க இயலாத இதுபோன்ற கரோனா காலத்தில் மெய்நிகர் ஆற்றுப்படுத்துதல் / உளவியல் சிகிச்சைகள் உலகெங்கும் வளர்ந்து வருகின்றன. மெய்நிகர் வழியாக வழிகாட்டுதல் வேண்டுகிறவர் மனதளவில் தயாராக இருப்பதுடன் அலைபேசியில் போதுமான அளவு சார்ஜ் ஏற்றி, இணைய வசதி உள்ள, கவனச்சிதறல் ஏற்படாத இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். சில அமர்வுகளுக்குப் பிறகுதான் தேவையிருப்பின் சிகிச்சைகள் தொடங்கும். நடத்தைசார் மாற்றங்கள் (Behavioral changes), எண்ணங்களைச் சீர்படுத்துவது (Cognitive reframing) அல்லது மேற்சொன்னவற்றுடன் மாத்திரையும் சேர்த்துப் பரிந்துரைப்பது எனச் சிகிச்சைகள் மாறுபடும். துரித உணவகம்போல துரித சுகம் வாய்ப்பில்லை என்பதால் பொறுமை அவசியம்.

உளவியல் முதல் உதவி

திருட்டு, வன்முறை, தீவிரவாத தாக்குதல், புயல், வெள்ளம், பூகம்பம், தீ மற்றும் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களும், குழந்தைகளையும் உறவினர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள பெற்றோரும் உற்றாரும் அதிர்ச்சியிலும்ஆற்றாமையிலும் உழல்வார்கள். அவ்வேளைகளில், பெரும்பாலும் குடும்பத்தினர், அண்டைவீட்டார், ஆசிரியர்கள் அல்லது யாரோ ஒருவர் அருகில் இருப்பார்கள். சில நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் வருவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இவர்கள் அளிக்கும் ‘உளவியல் முதல் உதவி’ காலத்தாற் செய்த உதவியாக மிகுந்த பலனளிக்கும். பாதுகாப்பு உணர்வு, மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது, உணர்வுரீதியான ஆதரவு, மனம் அமைதியடைவது, உள்ளிட்டவை தங்களைத் தாங்களே வலுப்படுத்தவும், ஆற்றல்களை மீட்டெடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

எனவே, மாணவர்களுக்கும், ஒவ்வொரு துறைசார் பணியாளர்களுக்கும் உளவியல் முதல் உதவி குறித்து அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது,

(1) மனிதாபிமானத்துடன் கூடிய ஆதரவும் அக்கறையும் காட்டுதல்
(2) உடனடித் தேவை என்ன என மதிப்பிடுதல்
(3) உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல்
(4) அவர்கள் பேசுவதைக் கேட்டல். ஆனால், பேசுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.
(5) மனம் அமைதியடைய உதவுதல்
(6) தேவையான தகவல்கள், சேவைகள், மற்றவர்களின் ஆதரவைப் பெற உதவுதல்
(7) கூடுதலாக, உடல்/மன காயம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்தல்
(8) பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், உரிமைகளை மதித்தல்.

உளவியல் படிப்போம்

உலக அளவில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. 2017 நிலவரப்படி உலகில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒன்பதுமனநல மருத்துவர்களே இருப்பதாக ஜான் எஃப்லய்ன் தன் ஆய்வில் (2021) குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக ஐரோப்பாவில் 50 பேர் இருப்பதாகவும், அமெரிக்காவில் 10.9, மேற்கு பசிபிக் நாடுகளில் 10, கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் 7.7, ஆப்பிரிக்க நாடுகளில் 0.9, வங்கதேசம், பாக்கிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் 2.5 பேர் மட்டுமே இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் கல்லூரிகளில் உளவியல் பாடப்பிரிவு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட அளவில் மனநல மருத்துவமனைகளும், தாலுகா அளவில் ஆற்றுப்படுத்தும் மையங்களும் தொடங்கப்பட வேண்டும். தொலைக்காட்சி வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் மனநலன் குறித்த தொடர் விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும்.

அக்டோபர் 10: உலக மனநல நாள்

சூ.ம.ஜெயசீலன்

sumajeyaseelan@gmail.com

விளையாட்டு வீரர்களின் மனநலம்: காலத்தின் கட்டாயம்

இந்து தமிழ் திசை, இளமை புதுமை இணைப்பிதழில் செப்.24, 2021 அன்று வெளியானது.

விளையாட்டு வீரர்கள் பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள் மற்றும் நாடுகளின் முகவரிகளாகவும் நல்லெண்ணத் தூதர்களாகவும் திகழ்கிறார்கள். தாங்கள் தாங்கியிருக்கும் அடையாளத்துக்குப் புகழ் சேர்க்க, நிதியுதவி செய்கிறவர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தீரா ஆவலுடன் போராடுகிறார்கள். உடல் பலம் இருந்தாலும், இத்தொடர் முயற்சியில் பல காரணிகள் மனதளவில் தளர்வுறச் செய்வதால், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மனநல ஆலோசகர்கள் அவசியம் என்கிற புரிதல் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

பயிற்சியும் பங்கேற்பும்

பயிற்சிக் காலங்களில் சாதி, மத, இன வேறுபாடுகள், வறுமை, பாலின சமத்துவமின்மை, பாலியல் துன்புறுத்தல்கள், உடல்நோய், காயம், பயிற்சியாளருடனும் மற்ற வீரர்களுடனும் உருவாகும் புரிதல் குறைபாடு உள்ளிட்ட காரணிகள் வீரர்களின் மனநலனைப் பாதிக்கின்றன. உணவுப் பழக்கக் குறைபாடுகளால் வீரர்கள் பலர் துயருறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, ஜிம்னாசியம், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் விளையாடுகிறவர்கள் உடல் எடை கூடிவிடக் கூடாதென மிகக் குறைவாகச் சாப்பிடுகிறார்கள்.

அதிகம் சாப்பிட்டுவிட்டோமோ என்கிற பொய்யுணர்வில், மேலும் குறைக்கிறார்கள். சிலர், தாங்களாக முயன்று வாந்தி எடுக்கிறார்கள். மாத்திரையால் வயிற்றுப்போக்கு வரச்செய்கிறார்கள். இதனால், சராசரிக்கும் குறைவான எடையுடன் போதிய அளவு திறனை வெளிப்படுத்த முடியாமல் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். மறுபுறம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் பிரிவில் உள்ளவர்கள் உடல் எடையை அதிகரிக்க நிறைய சாப்பிடத் தொடங்கி, பிறகு உடல் எடையைக் குறைக்க முடியாமல் பதற்றப்படுகிறார்கள்.

போட்டியில் பங்கேற்க மாநிலம், நாடு கடந்து போகிறவர்களின் உடல், புதிய நேர சுழற்சிக்கும், அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கும் விரைவில் பழக வேண்டும். இல்லையென்றால், உடலும் மனமும் வலுவிழக்கும்.

போட்டியில் பங்கேற்கும்போது, தான் எதிர்கொள்ளும் வீரர் தன்னைவிட தரவரிசையில் முன்னே இருப்பவரென்றால், அல்லது ஏற்கெனவே அவரிடம் வெற்றியை இழந்திருந்தால், ஈட்டி எறிதல், வில்வித்தை போன்ற போட்டிகளின்போது திடீரென மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமானால் வீரர்கள் இயல்பாகவே பதற்றப்படுவார்கள். புள்ளிகள் குறைகின்ற நேரத்திலும், வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசிப் பந்து போடும்போதும் பதற்றம் அதிகரித்து நிறையத் தவறிழைப்பார்கள். பார்வையாளர்களின் பெருஞ் சத்தமும், பாராட்டும், இகழ்ச்சியும் அவர்களை சமநிலை இழக்கச் செய்யும். போட்டியின்போது சதைப்பிடிப்பு, சதை விலகல், எலும்பு முறிவு ஏற்பட்டால் எதிர்காலம் சூன்யமான உணர்வெழும். இறுதிப் போட்டி, அல்லது ஒலிம்பிக் போன்ற உயர் விருதுக்குரிய போட்டிகளில் விளையாடும்போது தூக்கமின்மையும், மன அழுத்தமும் தொந்தரவு செய்யும்.

போட்டிக்குப் பிறகு மகிழ்ச்சி அல்லது துயரம் இரண்டின் உச்சத்தையும் வீரர்கள் தொட்டுவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், வீரர்கள் மீதான ரசிகர்களின் விமர்சனங்களும் பாராட்டும் அவர்களின் விளையாட்டுத் திறனையும், அன்றாட வாழ்வையும் பாதிக்கும்.

உதாரணமாக, 15 வயதுப் பள்ளி மாணவர் பிரணவ் தனவாதே 2016-ல் கிரிக்கெட்டில் 1009 ஓட்டங்கள் எடுத்தார். பாராட்டிய மும்பை கிரிக்கெட் சங்கம் ஐந்து ஆண்டுகளுக்குத் தருவதாகச் சொல்லி, ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் கொடுத்தது. ஆனால், 2017-ல் பிரணவின் தந்தை ‘பணம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். “பிரணவின் குடும்பத்தினரை வேற்றுக்கிரக வாசிகள்போல் உள்ளூர் மக்கள் பார்த்தார்கள். அவர்களின் பொய்ப்பேச்சுகள் காயப்படுத்தின. எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆட இயலாதது மன உளைச்சலைக் கொடுத்தது” எனப் பயிற்சியாளர் குறிப்பிட்டார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டோக்கியோ- 2020 ஒலிம்பிக் காலிறுதியில் தோற்றபிறகு அவர் மீதான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எல்லை மீறுகின்றன. “கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை. என் மனம் வெறுமையாக இருக்கிறது. என் வாழ்வில் என்ன நடக்கிறது என்று என்னாலேயே உறுதி செய்ய முடியவில்லை. பொதுவெளியில் இருக்கும் அனைவரும் என்னை ஒரு சடலத்தைப்போல் பாவிக்கின்றனர். ஒரு நபராக இயல்பாக இருக்க என்னை அனுமதிக்கலாமே. நான் முழுவதுமாக உடைந்து போயுள்ளேன்” என வேதனையுடன் போகட் குறிப்பிடுகிறார்.

ஒலிம்பிக் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு நிகழ்ந்ததுபோலவே வெற்றியைத் தவறவிட்ட வீரர்களை நிறம், மொழி, சாதியைச் சொல்லி அவமதிப்பது உலகம் முழுக்கவே இருக்கிறது. தேசத்துக்காக விளையாடி புறக்கணிப்புகளைச் சந்திக்கும்போது எழும் ஆற்றாமையும் அயற்சியும் வீரர்களைப் பாதிக்கிறது. மாற்றுத்திறனாளி வீரர்கள் என்றால் அவர்களுக்குக் கூடுதல் சிக்கல்கள் உள்ளன.

பயிற்சியாளர்களுக்கு மனநலப் பயிற்சி

பயிற்சியாளர்களும் மனநலச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். முக்கியப் போட்டிகளில் அணியினர் வெற்றி பெறவில்லையென்றால் தன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது அல்லது தான் வேலையைத் துறக்க வேண்டும் என்கிற சூழலில் பணிபுரிகின்ற, சவாலில் வென்று தங்கள் பெயரைக் காப்பாற்ற நினைக்கின்ற ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். தங்களின் எதிர்பார்ப்பையும், மன அழுத்தத்தையும் வீரர்கள் மேல் இறக்கி வைக்கிறார்கள்.

உதாரணமாக, ‘பிகில்’ திரைப்படத்தில் வீரர்கள் இறுதிப் போட்டியில் பின்தங்கி இருக்கும்போது, பாண்டியம்மா எனும் வீராங்கனையை நோக்கி, “தண்டச்சோறு. ஓடச்சொன்னா உருள்றாய். என்னடி இது… குண்டம்மா குண்டம்மா” என வார்த்தையாலும், உடல் மொழியாலும் பயிற்சியாளர் பிகில் பேசுவார். ஊக்கமூட்டுவதாக அவர் நினைக்கிறார். ஆனால், ஒரு வீராங்கனை மீது நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான உளவியல் தாக்குதல் அது. பயிற்சியாளர்களுக்கும் மனநல ஆலோசனை தேவை என்பதைத் தெளிவாகப் புரியவைக்கும் காட்சி அது.

விளையாட்டு உளவியலாளர்கள்

விளையாட்டின் ஒவ்வொரு சூழலையும் அணுகுவதற்கான நுணுக்கங்களையும், வழிமுறைகளையும் விளையாட்டு உளவியலாளர்கள் (Sports psychologists) பயிற்றுவிக்கிறார்கள். இலக்குகளை நிர்ணயிக்க, விளையாட்டுத் திறனை அதிகப்படுத்த, கவனம் குவிக்க, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, உணவுப் பழக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றை வெற்றிகொள்ளக் கற்பிக்கிறார்கள். காயம் குணமாகி விளையாடத் தொடங்குகையில் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், காயம்பட்ட இடத்தில் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்கவும் உதவுகிறார்கள். விளையாட்டு உளவியலாளர்களும், பயிற்சியாளர்களும் இணைந்து பணியாற்றும்போது வீரர்களின் காயம் விரைவில் ஆறுவதாகவும், விளையாட்டுத் திறன் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

‘உடல், மனக் காயம் இருந்தாலும் போட்டியில் விளையாடியே ஆக வேண்டும். காயத்தையும் மீறி விளையாடுகிறவர்களே சிறந்த வீரர்கள்’ என்கிற புரிதல் உலக அளவில் மெல்ல மாறி வருகிறது. மன அழுத்தத்தினால் கடந்த காலங்களில் வீரர்கள் சிலர் தற்கொலை செய்திருந்தாலும், ‘தங்கத்தின் கனம்’ (The Weight of Gold) எனும் குறும்படம் வழியாக ஒலிம்பிக் வீரர்கள் தங்களது மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் குறித்து வெளிப்படையாகப் பேசி கவனம் ஈர்த்துள்ளார்கள். மனநலச் சிக்கல்களைச் சொன்னால் போட்டிக்குத் தன்னைத் தேர்வு செய்யமாட்டார்கள் என்கிற அச்சத்தைக் களையவும், விளையாட்டு உளவியல் பாடத்தை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்த்து நிபுணர்களை உருவாக்கவும் அரசு திட்டமிடுவது காலத்தின் கட்டாயம்.

– சூ.ம.ஜெயசீலன்,

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

sumajeyaseelan@gmail.com

நீயே ஒளி… நீதான் வழி!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, செப்டம்பர் 10, 2021

Jesse Zhang for NPR

வாழ்வுக்கானப் போராட்டம் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது என்றாலும் வெற்றியும் தோல்வியும் நிறைந்த இப்போராட்டத்தில் தங்கள் உயிரை சிலர் பாதியிலேயே முடித்துக்கொள்கிறார்கள்; ‘வலுவுள்ளவையே வாழும்’ என்கிற டார்வினின் கோட்பாட்டை, உடல்பலத்தோடு மட்டுமல்லாமல் மனபலத்துடனும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் போகிறார்கள்.

உலகில் நிகழும் 100 இறப்புகளுள் ஒன்று தற்கொலையால் நிகழ்கிறது. அதிலும் 77% ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடக்கிறது. தமிழ்நாட்டில் தினமும் குறைந்தபட்சம் 36 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், இந்திய அளவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை குறிப்பிடுகிறது.

ஒருவர் தன் உயிரைத் தானே எடுத்துக்கொள்வதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. வறுமை, காதல் தோல்வி, போதைப் பழக்கம், திருமணம் தொடர்பான சிக்கல்கள், பணமிழப்பு, தேர்வில் தோல்வி, வேலையின்மை, தொழில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர்களின் இறப்பு, குழந்தை பெற இயலாமை, சுய கௌரவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தூண்டுதலாக இருக்கின்றன. உளவியலர் விக்டர் ஃபிராங்கிள், எதிர்பார்த்தது நடக்காமல் போவது அல்லது காலம் தாழ்த்துவது, தோல்வி, சலிப்பு, விபத்து, இயலாமை, மிரட்டல்கள் போன்றவை நம் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றன. அவ்வெற்றிடத்தை நாம் எதைக் கொண்டு நிரப்புகிறோம் என்பது மிகவும் முக்கியம் எனச் சொல்கிறார். வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் அர்த்தம் பொதிந்திருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அவ்வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், போதைப் பொருட்களால், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளால், மனச்சோர்வு, தனிமை, குற்றவுணர்வினால் அவ்வெற்றிடத்தைச் சிலர் நிரப்புகிறார்கள். இது தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது என மேலும் விளக்குகிறார்.

நடந்து முடிந்த தற்கொலை குறித்து ஆய்வுசெய்வதற்கு உளவியல் உடற்கூறாய்வு (Psychological Autopsy) நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறையில், இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சிகிச்சை அளித்தவர்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பார்கள். இதோடுகூட, மருத்துவ மற்றும் மனநல சிகிச்சையின் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். அவ்வாறான உளவியல் உடற்கூறாய்வின்படி, நடந்து முடிந்த தற்கொலைகளுக்கு மனநலச் சிக்கல்கள் காரணமாக இருந்ததை எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மனச்சோர்வு உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பு 20 மடங்கு கூடுதலாக உள்ளதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, தற்கொலை என்பது மனநோய் அல்ல. குணப்படுத்தக்கூடிய மனஅழுத்தம், மனச்சோர்வு, அதீத மகிழ்ச்சி அல்லது அதீத மனச்சோர்வு எனப்படும் இருமுனைக் கோளாறு, உணவு உண்ணுதல் கோளாறு போன்ற பலவற்றைக் கவனிக்காமல் விட்டதன் தீவிர விளைவே, தற்கொலைக்கு இட்டுச்செல்கிறது.

தற்கொலை என்பது நம்மளவில் நின்றுவிடுவதல்ல. குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் உடல், மன, பொருளாதார அளவில் பாதிக்கிறது. சமூகத்தின் முன் குற்றவுணர்வோடு வாழ வைக்கிறது. மேலும், மரபணு வழியாக நம் அடுத்தடுத்த தலைமுறையையும் தற்கொலையை நோக்கித் தள்ளுவதாக எண்ணற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவேதான், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், மனநல ஆலோசனைக்கு வரும்போது “இதற்கு முன்பு, உங்கள் குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொண்டுள்ளார்களா?” என மனநல மருத்துவர்கள் கேட்கிறார்கள். நாம் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு நம் சந்ததியை பலிகொடுப்பது நியாயம் அல்லவே!

பொதுவாக, தற்கொலை நடவடிக்கைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். (1) எல்லாருக்கும் சுமையாக இருப்பதாகவும், தம்மை மற்றவர்கள் ஏமாற்றிவிட்டதாகவும் நினைத்து, தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பது; (2) எந்தெந்த வழிகளிலெல்லாம் நிறைவேற்றுவது எனத் திட்டமிடுவது, வழிகளைத் தேர்ந்தெடுப்பது; (3) தற்கொலைக்கு முயல்வது. இதில் எந்த நிலையில் நாம் இருந்தாலும் நண்பர்கள் அல்லது நம்மீது அக்கறையும் அன்பும் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொண்டு மனதை இலகுவாக்க அச்சப்படக் கூடாது. தனியறையில் முடங்கக் கூடாது.

நமக்குத் தெரிந்தவர்கள் அதீத பதற்றத்துடன் இருந்தாலோ, பேசுவதையும் பழகுவதையும் குறைத்துத் தனிமையை அதிகம் நாடினாலோ அவரோடு பேச எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். கைபேசியில் அழைப்பவரின் குரலில் ஆழ்ந்த சோகம் அல்லது பதற்றத்தை உணர்ந்தால், எவ்வளவு முக்கியமான வேலையில் நாம் இருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு, அழைத்தவருடன் பேச வேண்டும். தான் பேசுவதைக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்பதே அவர் மீதும், அவரின் எதிர்காலம் மீதும், மற்றவர்களின் மீதான அவரது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். இதனை, “சிறு வயதில் குறைவான தன்மதிப்பு உடையவனாகவே இருந்தேன். தற்கொலை எண்ணமெல்லாம் இருந்தன. ஆனால், ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்தியது, ரோஜா படம் வெற்றி பெற்றது, மற்றும் அன்பெல்லாம் கிடைத்தவுடன் அதெல்லாம் போய்விட்டது” எனும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

எனக்கென்று யாருமே இல்லை. நான் நல்லவனாக இருந்து என்ன பயன்? யாரையுமே நம்பக் கூடாது என்னும் எதிர்மறைக் கருத்து வலுப்படுகிறபோது, நண்பர்களையோ நல்ல உறவுகளையோ தேடிச் சிலர் போக மாட்டார்கள். நண்பர்களே அழைத்துப் பேசினாலும் தவிர்ப்பார்கள். வாழ்வதற்குப் பதிலாகச் செத்துவிடலாம் எனவும் சொல்வார்கள். ஆற்றுப்படுத்தும் அமர்வுக்கு வந்த ஒருவர், “எனக்குப் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்றார். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்த ஆற்றுப்படுத்துநர், “உங்களைப் பொறுத்தவரையில் ‘பெரிய’ என்பதன் வரையறை என்ன?” என்று கேட்டார். வந்தவருக்குப் புரியவில்லை. கேள்வியை மீண்டும் கேட்ட ஆற்றுப்படுத்துநர் “பெரிய என்றால் கிரிக்கெட் பந்து அளவா? கால்பந்து அளவா? திருச்சி மாவட்டம் அளவு பெரியதா? பூமிப்பந்து அளவு பெரியதா?” வந்தவர் யோசிக்கத் தொடங்கினார்.

அடுத்தடுத்த அமர்வுகளில் எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாகச் சீரமைக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. “நான் தகுதியற்றவன், பிரச்சினையைத் தீர்க்கும் அளவு ஆற்றலற்றவன்” எனத் தொடக்கத்தில் சொன்னவர், “எவ்வளவோ சிக்கல்களை நான் சரிசெய்திருக்கிறேன். இதையும் என்னால் சரிசெய்ய முடியும்” என்றார். “யாருக்குமே நான் முக்கியமல்ல” என்றவர், “என் மீது அக்கறை கொண்டுள்ள பலர் உடன் இருக்கிறார்கள்” என்றார். “எல்லாரும் நேர்மையற்றவர்கள், யாரையும் நம்பக்கூடாது” என்றவர். “நான் நம்பக்கூடியவர்களும் என்னை நம்புகிறவர்களும் உடன் இருக்கிறார்கள்” என்றார். இப்போது அவர் நலமுடன் வாழ்கிறார். சரியான நேரத்தில் உதவி நாடுவதும், உடனிருப்பை நல்குவதும் நம்மையும் அயலாரையும் காப்பாற்றும்.

செப்டம்பர்-10: தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நாள்

சூ.ம.ஜெயசீலன்,

எழுத்தாளர், உளவியல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பிலிப்பைன்ஸ்,
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஆகஸ்ட் 04,2021

குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுக்கும் உன்னதப் பரிசு தாய்ப்பால். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் கிடைக்கும் சீம்பால் விலைமதிப்பற்றது. தாய்ப்பாலில் எல்லாவகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் காரணமாகிறது.

இரைப்பை சார்ந்த சிக்கல்கள், நிமோனியா, நீரிழிவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத் தொற்றிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் தாய்ப்பால் காக்கிறது. ஞாபக சக்தி, சிந்தனை திறன், அறிவு கூர்மை அதிகரிக்கிறது. பிறருடன் பழகுவதற்கும், தங்கள் உணர்வுகளை குழந்தைகள் ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் குடிப்பதற்குமான தொடர்பை நிறைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக, தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நரம்பு காப்புறை (Myelin), மூளையின் முழு அளவு, பெருமூளைப் புறணியின் அடர்த்தி, நரம்பு வெண்திசுவின் அளவு போன்றவை விரைவாக வளர்கின்றன. நரம்பிழைகள் (axon) வழியாக தகவல் பரிமாற்றம் விரைவாக நடப்பதற்கு நரம்பு காப்புறையாக்கம் (Myelination) மிகவும் முக்கியமானதாகும்.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்தப் பிறகான மனச்சோர்வுகளில் இருந்து தாய்மார்களைப் பாதுகாக்கிறது. குழந்தை பேற்றிற்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதைத் தாமதப்படுத்துகிறது. உடலில் எடை இழக்க உதவுகிறது. நீண்ட நல்ல உறக்கம் தருகிறது. குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோஸின் ஹார்மோன் சுரந்து தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி இரத்தப்போக்கு குறைகிறது.

மேலும், தாய்ப்பால் கொடுப்பது, பதட்டம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தங்கள் உணர்வுகளை ஒழுங்குபடுத்த உதவுவதால், மற்றவர்களுடனான நட்பும் உறவும் வலுப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள், குழந்தைகளை அதிகமாகத் தொடுவதாலும், குழந்தைகளின் தேவைகளை அதிகம் கவனிப்பதாலும், அதிகநேரம் முகமுகமாய் பார்த்துக்கொள்வதாலும் அவர்களுக்குள் பாச பிணைப்பு அதிகரிக்கிறது.

“குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். வேறு உணவோ, பானமோ ஏன் ஆறு மாதம் வரை தண்ணீர்கூட கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் மற்றும் அதனுடன் இணைந்து செல்கிற மற்ற உணவுகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும்” என யுனிசெஃப் சொல்கிறது. பாலூட்டுவதை அதிகரிப்பதன் வழியாக, உலக அளவில் ஐந்து வயதுக்குள்ளக இறக்கும் 820,000 குழந்தைகளைக் காப்பாற்ற முடியும், 20000 தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என ஐ.நா. குறிப்பிடுகிறது.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக 123 நாடுகளில் ஆய்வு செய்த யுனிசெஃபின் ஊட்டச்சத்துப் பிரிவு, 95% குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்போதும் கிடைப்பதாகச் சொல்கிறது. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 4% குழந்தைகளுக்கும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 21% குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளில் ஏழை மக்களும், ஏழை அல்லது நடுத்தர நாடுகளில் வருமானம் உள்ளவர்களும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில், பிறந்த ஒரு மணி நேரத்தில் 42% குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் கிடைக்கிறது. 55% குழந்தைகளே 0-6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கிறார்கள். தாய்ப்பால் கிடைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளை, குறிப்பாக வயிற்றுப்போக்கினாலும் நிமோனியாவினாலும் பலியாகாமல் காப்பாற்ற முடியும்.

தாய்ப்பால் கொடுக்க இயலாமை

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் எல்லா தாய்மார்களுக்கும் தெரியும். குழந்தை பெற்ற அனைவராலும் தாய்ப்பால் கொடுக்க இயலாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துதல்: ஆர்வத்துடன் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தாலும் பால்காம்பில் புண், வெடிப்பு, இரத்தம் வருதல், தாங்கமுடியாத வலி, மார்பில் தொற்று ஏற்படல், சீழ் உருவாதல், போதுமான பால் இல்லாமை, தொடர்ச்சியாக பால் வருவதில் சிக்கல், பலமணி நேரம் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டிய பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் குறுகிய காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை சிலர் நிறுத்துகிறார்கள்.  

கொடுக்கக் கூடாது: கதிர்வீச்சு சிகிச்சை பெறுகிறவர்கள், தீவிர தொற்று, காசநோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில உடல், மன நோய்களுக்காக மருந்து சாப்பிடுகிறவர்கள், கீமோதெரபி எடுக்கிறவர்கள், போதைப்பொருள், மதுவுக்கு அடிமையானவர்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (Herpes simplex) பாதிப்புள்ளவர்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் என்றாலும் பால்காம்பில் வெடிப்போ புண்ணோ இருந்தால் கொடுக்கக் கூடாது.

கொடுக்க முடியாது: பால் கொடுக்கும் ஆவல் இருந்தாலும் பால் சுரக்கத் தூண்டுகின்ற சுரப்பி (prolactin) குறைவாக இருப்பவர்கள், பால் சுரக்கும் திசுக்கள் (Glandular tissue) போதுமான அளவு வளர்ச்சி பெறாதவர்கள், அறுவை சிகிச்சை மூலமாக மார்பளவு குறைக்கப்பட்டிருப்பவர்கள் பால் கொடுக்க முடியாது. பால் கொடுப்பதால் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட முந்தைய கொடூரங்கள் நினைவூட்டப்படும் என்றால் அவர்களாலும் முடியாது.

இயலாமையின் உளவியல் தாக்கம்

தாய்ப்பால் கொடுக்க முன்கூட்டியே முடிவெடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு, குழந்தை பிறந்த பிறகான மனச்சோர்வு குறைவாக இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் ஆசை தடைபடும்போது தீவிரமான உளவியல் தாக்கம் ஏற்படுகிறது. தாய்ப்பால் சுரப்பதிலும், குழந்தை பால் குடிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு, மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்ன பல்வேறு வழிமுறைகளையும் செய்து பார்த்தப் பிறகும் தீர்வு கிடைக்காதபோது தாய் முற்றிலும் சோர்ந்துபோகிறார். பால் கிடைக்காமல் தன் குழந்தை அழும்போதும், குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்காதபோதும் கவலையும் விரக்தியும் மனச்சோர்வை அதிகரிக்கின்றன.

தாய்ப்பால் கொடுக்கிற அம்மாதான் “நல்ல அம்மா” என்கிற எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பதால், கொடுக்க இயலாதவர்கள் தங்களைக் குற்றவாளிகளாக, தோற்றுப் போனவர்களாக, மோசமான அம்மாக்களாக நினைத்து குற்ற உணர்வுக்குள் உழல்கிறார்கள். போதாமையாலும், ஏமாற்றத்தாலும் கவலைப்படுகிறார்கள். உறவினர்களின், நண்பர்களின் கேள்விகளாலும், பார்வைகளாலும் தேவையற்ற அழுத்தத்தைச் சுமக்கிறார்கள். அவமானத்திலும், கோபத்திலும் கூடுதலாக மனச்சோர்வுறுகிறார்கள். இது, பால் சுரப்பதை மேலும் பாதிக்கிறது. “தாய்ப்பால் வழியாக கரோனா பரவுவதில்லை, தாய்க்கு கரோனா தொற்று இருந்தாலும் போதுமான முன்னெச்சரிக்கையுடன் தாய்ப்பால் கொடுக்கலாம், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என நிறைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன” என யுனிசெஃப் சொல்கிறது. ஆனாலும், உண்மைக்குப் புறம்பான செய்தியைக் கேட்கும் தாய் பதட்டத்துடனேயே இருக்கிறார்.

அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் மருத்துவர்களும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிற அதே வேளையில், தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிக்கல்களையும், கொடுக்க இயலாது துயருருகிறவர்கள் தாங்களாக மீண்டு வருவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களைச் சங்கடப்படுத்துகின்ற சமூகத்தின் மனப்பான்மையை மாற்ற தாய்ப்பால் கொடுக்க இயலாததால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளைச் சொல்லி அறிவூட்ட வேண்டும். அக்கறை எனும் பெயரில் கேள்வி கேட்டு காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உடல், மன, மருத்துவ மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்களின் முடிவை நாம் மதிப்பது தாயின் மன நலனை மேம்படுத்தும், உடல் நலனை உறுதிப்படுத்தும், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும்.

ஆகஸ்ட் 1- 7 ‘உலக தாய்ப்பால் வாரம்’

சூ.ம.ஜெயசீலன்

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

sumajeyaseelan@gmail.com

மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 30,2021

பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலி கொடுக்க குழந்தைகள் கடத்தப்படுவதை அடிக்கடி வாசிக்கிறோம். எங்கேயோ, யாரையோ கடத்தியிருக்கிறார்கள் என அடுத்தச் செய்திக்குக் கடந்துவிடுகிறோம். ஆனால், மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை.

ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்றச் சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டைவிட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர், போர், வன்முறை மற்றும் தொழில் சார்ந்து புலம்பெயர்கிறவர்கள், வீதியில் தங்குகிறவர்கள், மற்றும் உடல் நலமும் மனநலமும் குன்றியவர்களே ஆட்களைக் கடத்துகிறவர்களின் இலக்காக இருக்கிறார்கள்.

வகையும் வழிமுறையும்!

ஆட்களைக் கடத்துகிறவர்கள் பலவகை உண்டு. தனி ஒருவரே திட்டமிட்டுக் கடத்துவது, இருவர் மூவர் சேர்ந்து ஒருவரைக் கடத்திவிட்டு பிரிந்துவிடுவது, அமைப்பாகச் சேர்ந்து வலைப்பின்னலுடன் செயல்படுவது, ஒரு கிராமத்தையோ நகரையோ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்துவது. இவர்கள் அனைவருமே விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் மிக எளிதாக விரைவாகக் கடத்தலை நிறைவேற்றுகிறார்கள். மனிதக் கடத்தல் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதும் கடத்தல்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.

பொதுவாக, கடத்தல் என்றாலே, குழந்தைகள் கடத்தப்படுவதை மட்டுமே பலரும் நினைக்கிறோம். தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவும் 2019-ஆம் ஆண்டு இந்திய அளவில் 2260 பேரும், தமிழக அளவில் 16 பேரும் மட்டுமே கடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்னும் கூடுதலாக, பிச்சை எடுக்க, உறுப்புகள் திருட, வன்முறைகளில் ஈடுபடுத்த, மதுக்கூடங்களில் ஆட, மற்றும் பாலியல் தொழிலுக்காகக் கடத்துகிறார்கள் என யோசிக்கிறோம். ஆனால், நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வெளியூரிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் அழைத்து வந்து விவசாயம், சமையல், சுரங்கம், தொழிற்சாலை, துணிக்கடை, மீன்பிடி, கட்டிடத் தொழில், வீட்டு வேலைகள் போன்றவற்றில் குறைந்தக் கூலிக்கு பல மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதும், சட்டத்துக்குப் புறம்பாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பதும், கட்டாயத் திருமணம் செய்வதும் ஆட்கடத்தல்தான். அதனால்தான், ஆட்கடத்தலை நவீன அடிமை முறை என்கிறார்கள்.

“வட இந்திய தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு வந்தால், நம்ம ஊர் ஆட்கள்போல அடிக்கடி புகைபிடிக்க போக மாட்டார்கள், வெட்டியாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள், நிறைய நேரம் வேலை செய்வார்கள். கொடுக்கிற கூலியை வாங்கிக்கொள்வார்கள். வாக்குவாதம் செய்ய மாட்டார்கள்” என்றெல்லாம் மற்றவர்கள் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நாமேகூட பேசியிருக்கலாம். அப்போதெல்லாம், ஆட்கடத்தலுக்கு ஆதரவாக நாம் பேசியிருக்கிறோம்.

ஆட்கடத்தலுக்கு எதிரானச் சட்டம்

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 370-ன்படி “சுரண்டும் நோக்கத்துடன் தன் வலிமையைக் காட்டி, வற்புறுத்தி, பொய்சொல்லி, மோசடி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூண்டுதலாக விளங்கி, பணம் கொடுத்தோ வாங்கியோ அல்லது வேறுவிதமான பலன்களைக் காட்டியோ பெற்றோரிடமிருந்து அல்லது பொறுப்பாளரிடமிருந்து ஆட்களைச் சேர்ப்பது (Recruits), அழைத்துச் செல்வது (Transports), அடைக்கலம் கொடுப்பது (Harbors), இடம் மாற்றுவது (Transfers), ஒரு நபர் அல்லது நபர்களைப் பெறுவது (Receive) அனைத்தும் ஆட்கடத்தலே.” மேலும், ‘கடத்தப்படுகிறவரின் சம்மதத்தின் பேரில்தான் அழைத்துச் சென்றோம், என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் சட்டம் வரையறுக்கிறது. மீட்கப்பட்டவரின் மறுவாழ்வு குறித்து இச்சட்டத்தில் எதுவும் இல்லையென்றாலும், கடத்தலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் வலியுறுத்திய ‘ஆட்கடத்தலுக்கு எதிரான மசோதா-2018’ மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் மாநிலங்களவையில் அம்மசோதா நிறைவேறவே இல்லை.

மனித மாண்பைக் காப்போம்

கடத்துகிறவர்கள் மீது வழக்குப் பதிந்து, தொடர்ச்சியாக வழக்காடி, தண்டணை வழங்குவதோடு இன்னும் சிலவற்றையும் நடைமுறைப்படுத்துவது நலம் பயக்கும். முதலாவது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது: வெளிநாட்டுப் பயணங்களின்போது, அங்குள்ள தொடர்வண்டி நிலையங்களில், “ஆட்கடத்தல் என்றால் என்ன? எவையெல்லாம் ஆட்கடத்தல் சட்டத்துக்குள் வருகிறது? கடத்துகிறவர்களுக்கான தண்டனை என்ன? கடத்தப்பட்டாலோ அல்லது வேறுயாராவது கடத்தப்படுவது தெரிந்தாலோ எந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்வது?” போன்ற தகவல்கள் அசைபட (Animation) வடிவில் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். நம் அரசாங்கமும்கூட இதேமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இரண்டாவது, மீட்கப்படுகிறவர்களின் மனநலன் சார்ந்து திட்டமிடுவது: கடத்தப்பட்ட அனைவருமே, தாங்கள் தனியாகப் போனது, ஏமாந்தது, சிந்திக்காமல் சிக்கியது என மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து தீவிரக் குற்ற உணர்வில் அவதிப்படுவார்கள். மதுரையில் தனியார் விடுதியில் தங்கி நான் கல்லூரியில் படித்தபோது, ஒரு மாணவன் திடீரென காணாமல் போய்விட்டான். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காவலர்களும் தேடத் தொங்கினார்கள். மறுநாள் இரவு பதினொரு மணிக்கு மிகவும் களைத்துப் போய் அவனாகவே வந்தான். முகவரி கேட்ட யாருக்கோ வழிகாட்டியதாகவும், நன்றியோடு அவர் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததாகவும் சொன்னான். அது மட்டும்தான் அவனுக்கு நினைவிலிருந்தது. மறுநாள் காலையில் ஓசூரில் சாலை ஓரம் கிடந்துள்ளான். எப்படி அங்கே சென்றான் என்பது தெரியவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் திரும்பி வந்துள்ளான். “நானா இப்படி ஏமாந்தேன்?” என கேட்டுக்கொண்டே பல நாட்கள் அவன் அவமானத்திலும் குற்ற உணர்விலும் தவித்தான்.

கடத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பாக இருந்த இடம், நடத்தப்பட்ட விதம், செய்த வேலை, தனிமை போன்றவைகளின் தீவிரத்தைப் பொறுத்து உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு (PTSD) இருக்கும். தனியாகச் செல்ல அச்சம், முன்பின் தெரியாதவர்களுடன் பேச பயம், நம்பிக்கையின்மை, தாழ்வுமனப்பான்மை, முற்றிலும் தோற்றுப்போன எண்ணம், அடிக்கடி களைப்பு, கோபம், தூக்கமின்மை, பசிக் கோளாறு, கொடூரச் சூழலில் இப்போதும் இருப்பது போன்ற மருட்சி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற எண்ணம் போன்றவற்றின் தாக்குதலில் துன்புறுவார்கள். இவர்களுக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான இடத்தை உறுதிப்படுத்துவதோடு, வாழ்க்கைத் திறன் பயிற்சிகளையும், இயல்பு நிலைக்குத் திரும்பும் முறைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆற்றுப்படுத்துநர்களுடன் இணைந்து இப்பணியைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.

மூன்றாவது, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடித் திட்டமிடுவது: இதைத்தான் மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நாளின் மையக் கருவாக, ‘பாதிக்கப்பட்டவர்களின் குரல்களே வழி காட்டுகின்றன’ (Victims’ voices lead the way) என ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு முன்மொழிந்துள்ளது. இக்குரல்கள்தான், கடத்தப்பட்டவர்களை மீட்கவும் வழிநடத்தவும் போகின்ற கதாநாயகர்கள் என புகழ்ந்துள்ளது. தங்களின் அறியாமையாலும், தவறான புரிதல்களாலும் சரியான உதவியைப் பெற முடியாமல் கடத்தப்பட்டவர்கள் தவிப்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆட்கடத்தலில் இருந்து தப்பித்தவர்களும் மீட்கப்பட்டவர்களும் பேசுவதற்குச் செவிமடுக்கவும் கற்றுக்கொள்ளவும் நாம் முன்வர வேண்டும் எனவும், இது, ‘பாதிக்கப்பட்டவரை மையப்படுத்திய’ (Victim-centered) ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை முன்னடுக்க உதவும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. மனிதக் கடத்தலுக்கு எதிரானப் பரப்புரையில் விழிப்போடு செயல்படுவது அரசு, சமூகம் அனைவரின் கடமையாகும்.

ஜுலை 30: ஆட்கடத்தலுக்கு எதிரான தினம்

சூ.ம.ஜெயசீலன்

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

sumajeyaseelan@gmail.com

இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 16,2021

Image Credits: School That Rock

கல்லூரியில் மாணவர்கள் கேலி செய்யப்படுவதைத் தவிர்க்க இயலாது என்னும் புரிதல் 1990-களில் தமிழ்நாட்டில் இருந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட பிறகு, 1997-ல் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ராகிங்குக்கு எதிரான சட்டம், இக்கொடும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்லூரிகளில் ‘ராகிங் இல்லா வளாகம்’ அமையவும், கேலிக்குள்ளாகிறவர்கள் புகார் தெரிவிப்பதற்கான அமைப்பு கல்லூரிகளில் ஏற்படவும் இச்சட்டம் வழிவகை செய்தது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, இணையம் போன்றவற்றின் வழியாக மிரட்டப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இச்சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தகவல்தொடர்புச் சாதனங்களால் மிரட்டப்படு வதை, “நவீனத் தொடர்புச்சாதன வலைதளங்களான செல்பேசி, இணையதளம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுத்தவரின் உடல் அமைப்பு, அறிவுத் திறன், குடும்பப் பின்னணி, ஆடைத் தேர்வு, தாய்மொழி, பிறந்த இடம், அணுகுமுறை, இனம், சாதி, வர்க்கம், பெயர் போன்றவற்றைப் பழிப்பது, கேலி செய்வது, இழிவுபடுத்துவதன் வழியாக வசைகூறுவது / சீண்டுவது” என இந்தியக் குற்றவியல் நிபுணர் ஜெய்சங்கர் வரையறுத்துள்ளார்.

பாதுகாப்போடும் பொறுப்போடும் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்கின்ற நான்சி வில்லார்டு (Nancy E. Willard), தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியாக மிரட்டுவதை எட்டு வகைகளாகப் பிரிக்கிறார்.

1.கொழுந்துவிட்டெரிவது (Flaming): குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வழியாக மரியாதைக்குறைவான, நாகரீகமற்ற, அல்லது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, கோபமாகப் பதில் சொல்லி சண்டைபோடுவது.

2.தொல்லைகொடுப்பது (Harassment): தனிநபரை மையப்படுத்தி, தரக்குறைவான, மரியாதையில்லாத, காயப்படுத்துகிற, அவமதிக்கிற செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்புவது.

3.இழிவுபடுத்துவது (Denigration): ஒருவரின் புகழைக் கெடுக்க, நட்பைச் சீர்குலைக்க, ஒருவரை இழிவுபடுத்த, கொடூரமான… இல்லாத பொல்லாத தகவல்களைச் சொல்லி புரணிகளைப் பரப்புவது, பதிவிடுவது, அனுப்புவது.

4. ஆள்மாறாட்டம் (Impersonation): போலியான கணக்கைத் தொடங்கி, அல்லது மற்றவரின் கணக்கை உடைத்து கருத்துக்கள், படங்கள், காணொலிகள் பதிவது. ஒருவருக்கு பிரச்சினை ஏற்படச் செய்யவும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும் முனைவது.

5. ஒதுக்குதல் (Exclusion): வேண்டுமென்றே மெய்நிகர் குழுவில் இருந்து அல்லது இணையவழி விளையாட்டில் இருந்து ஒருவரை நீக்குவது, ஒதுக்குவது, கண்டுகொள்ளாமல் இருப்பது.

6.பின்தொடர்தல் (Cyber-stalking): பயமுறுத்துகிற அல்லது மிரட்டுகிற குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களை தொடர்ந்து அனுப்பி ஒருவரை எப்போதும் அச்சத்துடனேயே வைத்திருப்பது.

7.வெளியிடுவது (Outing) ஒருவரின் தனிப்பட்ட, அல்லது அடுத்தவருக்குத் தெரிந்துவிட்டால் அவமானம் ஏற்படுத்தக்கூடிய, முக்கியமான தகவல்களை மெய்நிகரில் பதிவிடுவது மற்றும் பகிர்வது. பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்களைப் பதிவிடுவது மற்றும் பகிர்வது.

8.தந்திரம் (Trickery): சூழ்ச்சி செய்து, மற்றவர்களின் ரகசியத்தைப் பெறுவது, முக்கியமான தகவல்களைப் பெற்று பொதுவெளியில் பரப்புவது.

நேருக்கு நேர் மிரட்டப்படுவதற்கும், தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியாக மிரட்டப்படுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னது கல்வி நிலையங்கள், பணித்தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என அத்தோடு முடிந்துவிடுகின்றன. ஆனால், பின்னது, நீங்கள் பள்ளியில் இருந்தாலும், வேலை செய்தாலும், பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் உங்களைத் துரத்தும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், மின்னஞ்சல் போன்ற சமூக வலைதளங்களிலிருந்து நீங்கள் வெளியேறலாம், தொல்லை தரும் சமூக வலைதளக் கணக்குகளைத் தடுக்கலாம், திறன்பேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சாதாரண செல்பேசி வாங்கலாம், என்ன செய்தாலும் உங்களால் தப்பிக்க இயலாது. ஏனென்றால், மிரட்டுகிறவர்களின் முகங்களோ முகவரிகளோ பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவருக்குத் தெரிவதில்லை. போலியான கணக்கில் இருந்தே அவர்கள் மிரட்டுகிறார்கள். முன்பெல்லாம், ‘வலுவுள்ளவர்கள்தான் அல்லது ஆண்கள்தான் இப்படி நடந்துகொள்வார்கள்’ என பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால், தகவல்தொடர்புச் சாதனம் வழியான மிரட்டல் அதை உடைத்துள்ளது. வயது, பாலினம், இனம், நாடு வேறுபாடின்றி அடுத்தவரை மிரட்டுகிறார்கள்.

பாதிப்புக்குள்ளாகும் பதின்பருவத்தினர்

உலக மக்கள்தொகையில் 60% பேர் இணையம் வழியாக அச்சுறுத்தப்படுதல், வசைகூறப்படுதல், துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், பதின்பருவச் சிறார்கள், அதிலும் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சென்னை மாணவர்களிடம் 2018-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 50% மாணவர்கள் தகவல்தொடர்புச் சாதன மிரட்டலுக்கு உள்ளானதாகவும், தங்கள் நண்பர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக 57% மாணவர்கள் சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.

மனித வளர்ச்சியில் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும் தனக்கான அடையாளத்தைத் தேடும் இப்பருவத்தில், குடும்பத்தின் பிடியிலிருந்து விலகிப் புதிய உறவுகளை ஏற்படுத்தச் சிறுவர்கள் முனை கிறார்கள். நண்பர்களையும் ஒத்த ரசனை உள்ளவர்களையும் தேடுகிறார்கள். அவர்களிடம் தயக்கமின்றித் தங்கள் கருத்துகள், உணர்வுகள், பொழுதுபோக்கு அனைத்தையும் பகிர்ந்து மகிழ்கிறார்கள். திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுப் பெறுகிறார்கள். தன்மீது ஆதிக்கம் செலுத்தாது, தன்னையொத்தச் சிறுவர்கள் வழங்கும் அறிவுரைகளுக்கும் ஆறுதல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இச்சிறுவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைச் சமூக வலைதளங்கள் கொடுக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத இணைய உலகம் அளிக்கும் மகிழ்வில் திளைத்து, ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடவுச்சொற்களில் தொடங்கி, தங்களைப் பற்றிய இதர தகவல்களையும், நிழற்படங்கள், காணொளிகளையும் விளையாட்டாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாணவர்களின் இத்தகைய அதீத ஆர்வமும் சுதந்திரமுமே அவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அவர்கள் பகிர்ந்த படங்களையும் தகவல்களையும் பலருக்கும் பகிர்வது, பொதுத்தளத்தில் பதிவுசெய்வது, ‘பதிவுசெய்துவிடுவேன்’ என மிரட்டுவது போன்றவற்றைப் பதின்பருவத்தினர் அதிகம் எதிர்கொள்கின்றனர். போலிக் கணக்குகளை உண்மையென நம்பி ஏமாந்துபோகின்றனர். உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த 16 வயது அட்னன் பத்ரவாலாவை, முன்பின் தெரியாத ஐந்து பேர் 2007-ல் ஆர்குட் வழியாகப் பின்தொடர்ந்து நண்பர்களானார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களைப் பார்க்க அட்னன் சென்றான். அட்னனைக் கடத்தி இரண்டு கோடி ரூபாய் கேட்ட ‘நண்பர்கள்’ மறுநாளே அவனைக் கொன்றுவிட்டார்கள்.

பதின்பருவத்துக் கல்லூரி மாணவி ஒருவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை என் செல்பேசி எண்ணை மாற்றிவிட்டேன். தெரியாதவர்களிடம் இருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் அடிக்கடி வந்ததால், எத்தனையோ இரவுகள் தூங்க முடியாமல் தவித்துள்ளேன். இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமலேயே இருந்துள்ளேன். வீட்டில் சொல்லவும் பயம். எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்கிற குழப்பம். இதிலிருந்து விடுபட வேறு வழி தெரியாதபோது வீட்டில் சொன்னேன். ‘உன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பயப்படாமல் தைரியமாக இரு’ என அண்ணனும் அப்பாவும் சொன்னார்கள். அதன் பிறகுதான் உயிர் வந்தது. கல்லூரிப் பாடங்கள் வாட்ஸ்அப் வழியாகப் பகிரப்படுவதால் வேறு வழியில்லாமல் திறன்பேசி பயன்படுத்துகிறேன்” என்றார். இவருக்குக் கிடைத்தது போன்று, மகனையும் மகளையும் புரிந்துகொள்கிற குடும்பம் எல்லோருக்கும் அமைவதில்லை.

தனிச் சட்டம் காலத்தின் அவசியம்

தகவல்தொடர்புச் சாதனம் வழியாக மிரட்டப்படுகிறவர்கள் தங்கள் உடல் முழுவதும் அச்சம் படர்வதை உணர்வார்கள். யாரை நம்புவது, யாரிடம் சொல்வது எனப் புரியாமல் தவிப்பார்கள். தன்னையே குற்றவாளிபோலக் கருதி நடந்துகொள்வார்கள். சமூகம், குடும்பம், நண்பர்களிடமிருந்து பிரிந்து, தனிமையில் உழல்வார்கள். செல்பேசியில் எந்த அழைப்பு வந்தாலும் பதற்றப்படுவார்கள். சுய மதிப்பு குறைந்து, பசி, தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு.

தகவல்தொடர்புச் சாதன மிரட்டலிலிருந்து ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பதின்பருவத்தினரைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் பயன்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளன. மாற்றுக் கருத்தாளர்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம் உள்ளிட்டவற்றையும் குறித்து வதந்திகளைப் பரப்புவதும், தகாத வார்த்தைகளால் சாடுவதும், எதிராளிகளின் செல்பேசி எண்களைப் பொதுவெளியில் பகிர்ந்து பலரையும் வசைபாடச் செய்வதும் அவர்களது பணிகளுள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்வதன் வழியாக இச்சமூகத்தைப் பெருமளவில் சீர்திருத்த முடியும்.

ஏற்கெனவே, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், எந்தெந்த வழிகளிலெல்லாம் தகவல்தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்பதை வரையறுத்து, முழுமையான தனிச் சட்டம் உருவாக்குவது அவசியம். இது அளப்பரிய மாற்றத்தை உருவாக்கும்!

– சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். 

Watch Movie in YouTube: Cyberbully (2011)

Cyberbully (2011) Movie Folder Icon by Kittycat159 on DeviantArt

இது பேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுன் 28, 2021

சமீபகால நகைச்சுவை – திகில் திரைப்படங்களைப் பார்த்து நாம் வயிறு வலிக்க சிரித்திருக்கிறோம். மன பாரம் குறைந்த மகிழ்வில் நன்கு தூங்கியிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே திகிலுறும்போது ஒருவரால் சிரிக்க முடியுமா? மனம் சமநிலையில் இருக்குமா?

திகிலுறச் செய்யும் நிகழ்வுகள் ஒருவித மனநிலையை நமக்குள் தூண்டுகின்றன. இந்தத் தூண்டுதலால் பாதிக்கப்படாமல் ஒருசில நாட்களிலேயே பலர் சரியாகிவிடுகிறார்கள். ஆனாலும், மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திகிலில் இருந்து வெளியேற முடியாமல் சிலர் துன்புறுகிறார்கள். இவர்களை ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’ (Posttraumatic Stress Disorder- PTSD) உள்ளவர்கள் என உளவியல் வரையறுக்கிறது. திகில் அனுபவத்தை, நேரடி அனுபவத்தால் திகிலுறுவது மற்றும் பிறருக்கு நடப்பதைப் பார்த்து திகிலுறுவது என இரண்டு வகையாக உளவியல் பிரிக்கிறது.

தனக்கும் பிறருக்கும்

இயற்கை அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவில் சிக்கியவர்கள், வாகன விபத்தைச் சந்தித்தவர்கள், சார்ஸ் போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், கடலில் மீன் பிடிக்கும் போது அலையிலும் வலையிலும் சிக்கி மீண்டவர்கள், போர், கலவரம் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் மாட்டியவர்கள், கொலையில் தப்பியவர்கள், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகள் அனைவருமே நேரடியாக திகிலுறுவதன் சாட்சிகள்.

மற்றவர்கள் மிரட்டப்படுவதை, கொலை செய்யப்படுவதை, குடும்ப வன்முறையை, இயற்கைக்கு மாறான மரணத்தை, பாலியல் துன்புறுத்தலைப் பார்ப்பவர்கள், பாலியல் வன்புணர்வு போன்ற வழக்கில் மிக நுட்பமாக சிறுசிறு தகவலையும் விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் அனைவருமே பிறருக்கு நடப்பதைப் பார்த்து திகிலுறுவதன் சான்றுகள்.

பொதுவாக நோய்க்கான அறிகுறிகள் நிகழ்வு நடந்த முதல் மூன்று மாதத்துக்குள் தெரிய ஆரம்பிக்கும். அன்றாட நடவடிக்கைகளைத் தொந்தரவு செய்யும். வேலை செய்கின்ற இடம், அலுவலகம், வீடு, படிக்கும் இடம், நட்பு, உறவு அனைத்திலும் இயல்பாக இருக்க இயலாதவாறு பாதிப்பை ஏற்படுத்தும்.

“நல்லாத்தாங்க இருந்தான், என்ன ஆச்சுன்னே தெரியல. விபத்துக்குப் பிறகு அப்படியே ஆளே மாறிட்டான். யாரிடமும் பேச மாட்டேங்கிறான், வீட்டைவிட்டு வெளியே போகவே மாட்டேங்கிறான்” என புகார் சொல்வார்கள். வருவோர் போவோர் அனைவரும் அறிவுரை கூறுவார்கள்.

1064120002

ஊடுறுவல் அறிகுறிகள் (Intrusion Symptoms)

நடந்த நிகழ்வை சிலர் தானாகவே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பார்கள். அவர்களால் அதிலிருந்து வெளியேறவே முடியாது. தத்ரூபமாக தற்போதுதான் நிகழ்வதுபோல நினைப்பார்கள். திகில் ஏற்படுத்திய நிகழ்வுகளை நினைவூட்டும் கொடுங்கனவுகள் அடிக்கடி வரும். சில நேரங்களில், நிகழ்காலம் குறித்த முன்னுணர்வுகள் முழுதும் மறந்து நாம் எங்கே இருக்கிறோம், அருகில் இருப்பது யார் என்கிற எந்த உணர்வும் இன்றி செயல்படுவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்த நிகழ்வை விளையாட்டாக விளையாடுவார்கள்.

“பொண்ணுக்கு பேய் புடிச்சிருக்கு! பரமக்குடி பக்கம் ஒருத்தர் பேய்க் கோளாறு இருக்கிறவங்ளைப் பார்க்கிறாராம். போனா உடனே சரியாகிடுதாம். ஒருநாள் போய்ட்டு வாங்க” என அறிவுரை சொல்வார்கள். புறணி பேசத் தொடங்குவார்கள்.

திகிலுற்ற சிலர், இரவில் திடீரென்று விழித்தெழுவார்கள், அழுவார்கள், அஞ்சுவார்கள், பிதற்றுவார்கள். கல்லூரி விடுதியில் என் நண்பர் மின்சாரம் தாக்கி பலியானார். மகனின் இறப்பை பெற்றோரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் இரவு நல்ல மழை பெய்தது. அந்த நள்ளிரவில் கையில் குடை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார் தந்தை. வீட்டில் இருந்தவர்கள் பதறி எழுந்து ஓடி அவரைப் பிடித்து நிறுத்தி, ‘எங்கே போகிறீர்கள்?’ என கேட்டபோது, ‘மகன் மழையில நனைஞ்சிக்கிட்டு இருக்கான். அவனுக்கு குடை கொடுக்கப் போகிறேன்’ என்றாராம்.

ஒரு சத்தம், ஒரு சொல், ஒரு காட்சி ஏதோ ஒன்று திகிலை நினைவுபடுத்தும்போது அது  தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்தும், உடலும் எதிர்வினை செய்யும். 2004ஆம் ஆண்டு ஒரு இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற எங்கள் மீது ஒரு லாரி மோதிச் சென்றது. வண்டியை ஓட்டிய என் பெரியப்பா என் கண் முன்னே இறந்தார். எனக்குப் பெரிய அடியொன்றும் இல்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், பேருந்தின் வலதுபக்க சன்னல் ஓரம் அமர்ந்து பயணித்தேன். ‘விஸ்க்’ என பெருஞ்சத்தம் ஒருநொடியில் என் காதுகளைக் கடந்தது. அரண்டு இடப்பக்கம் விழுந்தேன். பிறகுதான் தெரிந்தது, பேருந்தை ஒரு லாரி கடந்து சென்றிருக்கிறது என்பது. இப்போது சென்ற லாரியின் வேகம், விபத்து நடந்தபோது எங்கள் மீது மோதிவிட்டு விரைந்து சென்ற லாரியின் பேரோசையை நரம்புகளுக்குள் கடத்திவிட்டது.

விலகிச் செல்லுதல்

திகிலடையச் செய்த நிகழ்வைப் பற்றி எதார்த்தமாகக்கூட நினைக்க சிலர்  விரும்ப மாட்டார்கள். அதுகுறித்து மற்றவர்கள் நினைவுபடுத்துவதையோ, அல்லது பேசுவதையோ ஏற்கமாட்டார்கள். எதையாவது சொல்லி பேச்சை மாற்றுவார்கள். நிகழ்வு நடந்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். அதில் தொடர்புடைய மனிதர்களைச் சந்திக்க மறுப்பார்கள். திகிலை நினைவுபடுத்தும் பொருட்கள், செயல்கள், உரையாடல்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

தன்னைப்பற்றியும், மற்றவர்களைக் குறித்தும், உலகத்தைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பயம், திகில் கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும். ‘நான் மோசமானவன்’; ‘இப்படி நடந்ததுக்கு நான்தான் காரணம்’; ‘நான் எப்போதுமே தவறாகத்தான் முடிவெடுப்பேன்’; ‘யாரையுமே நம்ம முடியாது’; ‘உலகத்தில் பாதுகாப்பான இடமே இல்லை’; ‘என்னுடைய நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டுள்ளது’ என நினைப்பர். பயம், திகில் கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும்.

முன்பு எதையெல்லாம் மகிழ்ச்சியாக செய்தார்களோ அவை அனைத்திலும் ஆர்வம் குறையும். மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பர். மகிழ்ச்சி, மனநிறைவு, திருமண உறவு போன்றவற்றில் நேர்மறை உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்த இயலாமல் உணர்ச்சியே இல்லாதவர் போல் இருப்பர்.

இவர்களைப் பார்த்து, “பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசறா!” என ஒருவர் சொல்ல; “ஆமா, இருக்கலாம், பாஸ்டர் ஒருத்தர் முழு இரவு செபம் செய்கிறார். குடும்பத்தோட போய் எல்லாரும் முழு இரவு செபம் செஞ்சா சரியாகிடும்” என அடுத்தவர் குறிப்பிட; “தர்காவுல மந்திரிச்ச கயிறு வாங்கி கட்டினால் போதும்” என மற்றவர் பரிந்துரைக்க; “குளித்லை மந்திரவாதி மந்திரிச்சு கொடுக்கிற தாயத்த கட்டிவிட்டா எல்லாம் சரியாகிடும்” என இன்னொருவர் சொல்ல என்று குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்கிவிடுவார்கள்.

எதிர்வினை

எவ்விதத் தூண்டுதலும் இல்லாமலேயே, அல்லது குறைந்த தூண்டுதலுக்கே திகிலுற்ற சிலர் உடனடியாக எதிர்வினை ஆற்றுவார்கள். எரிச்சலுறுவார்கள், கோபப்படுவார்கள், கத்துவார்கள், சண்டைக்கு நிற்பார்கள், பொருட்களை உடைப்பார்கள். அதிகமாக குடிப்பார்கள், போதைப் பொருள் எடுப்பார்கள், அதிவிரைவாக வாகனம் ஓட்டுவார்கள். எளிதில் பயப்படுவார்கள், எப்போதும் யாராவது உடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தூங்குவதில் சிக்கல், கவனம் செலுத்துவதில் சிக்கல் அனுபவிப்பார்கள். தற்கொலை எண்ணமும் தலைதூக்கும்.

இயல்பு நிலைக்குத் திரும்புதல்

எல்லோருமே நோயாளிகளா என்று கேள்வி கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். என்னென்ன அறிகுறிகள் இருக்கின்றன? எத்தனை அறிகுறிகள் இருக்கின்றன? நோய்க்குறிகளின் தீவிரம் என்ன? எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை வருகிறது? எவ்வளவு நேரம் நீடிக்கிறது? போன்ற பல்வேறு காரணிகளைத் தெரிந்த பிறகே ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’ உண்டா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால், திகிலுற்ற அனைவருக்குமே தற்காலிகமாக சில பிரச்சனைகள் இருக்கும். அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட ஆகலாம். ஆற்றுப்படுத்துதல், தியானம், செபம், நண்பர்களைச் சந்திப்பது, படைப்பாற்றல் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவது என தங்களையே பொதுவாக பலர் சரிசெய்துகொள்வார்கள். அடுத்தடுத்த வேலைகளில் நடந்ததையே மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.

அதேவேளையில், முழுமையாக எல்லாரும் நலமடைந்து விட்டார்கள் என சொல்லவும் இயலாது. இயல்புநிலைக்குத் திரும்பிய வெகுசிலருக்கு, பழைய நிகழ்வை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போதோ, புதிதாக திகில் அனுபவம் ஏற்படும்போதோ, அல்லது அன்றாட வாழ்வின் பதற்றங்களினாலோ மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்தும் இதன் அறிகுறிகள் வெளிப்படலாம்.

குணப்படுத்த முடியும்

‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலை’வைக் குணப்படுத்த ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உளநோய்த் தீர்முறைகள் (Psychotherapy) பல இருக்கின்றன. தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு மாத்திரைகளும் பயன்பாட்டில் உள்ளன. எனவே, உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் செல்வோம். ஆற்றுப்படுத்துனர்களை நாடுவோம். திகிலுற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுப்போம் அவர்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக நடைபோட உதவுவோம். ஒருமுறையாகிலும் திகிலுறாதவர்கள் உலகில் யாருமே இதுவரை இருந்ததில்லை என்பதை நினைவில் ஏந்துவோம்.

சூ.ம.ஜெயசீலன் sumajeyaseelan@gmail.com

ஜுன்: ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’க்கான மாதம்

Design a site like this with WordPress.com
Get started